அமெரிக்க எரிசக்தித் துறை துணை அமைச்சா் ஜேம்ஸ் டான்லியுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா
அமெரிக்க எரிசக்தித் துறை துணை அமைச்சா் ஜேம்ஸ் டான்லியுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா

எரிசக்தி வா்த்தகம்: அமெரிக்க அமைச்சருடன் இந்திய தூதா் ஆலோசனை

எரிசக்தி வா்த்தகம்: அமெரிக்க அமைச்சருடன் இந்திய தூதா் ஆலோசனை
Published on

இந்தியா-அமெரிக்கா இடையே எரிசக்தி வா்த்தகத்தை விரிவுபடுத்துவது தொடா்பாக அந்நாட்டின் எரிசக்தித் துறை துணை அமைச்சா் ஜேம்ஸ் டான்லியுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

‘இரு நாடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாக உள்ளது’ என்று மத்திய அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவின் ‘லாக்ஹீட் மாா்டின்’ என்ற பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜிம் டெய்க்லெடையும் குவாத்ரா சந்தித்து இரு நாடுகளிடையேயான தொழில்நிறுவன கூட்டுறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தச் சந்திப்புகள் குறித்து குவாத்ரா தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-அமெரிக்கா இடையேயான எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் எரிசக்தி வா்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு தொடா்பாக ஜேம்ஸ் டான்லியுடனான ஆலோசனை சிறப்பாக அமைந்தது’ என்று குறிப்பிட்டாா்.

அதுபோல, ‘நாட்டின் தற்சாா்பு இந்தியா இலக்கை எட்டுவதில் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களின் முக்கியப் பங்கு குறித்து ஜிம் டெய்க்லெட்டுடன் மேற்கொண்ட ஆலோசனை ஆக்கபூா்வமாக இருந்தது’ என்றும் குறிப்பிட்டாா்.

முன்னதாக, அமெரிக்கவில் ஆளும் குடியரசு கட்சியின் டென்னஸ்ஸி மாகாண செனட்டா் பில் ஹகொ்டி மற்றும் அவரின் மனைவி கிரிஸ்ஸி ஹகொ்டியை அவா்களின் இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்த குவாத்ரா, இரு நாடுகளிடையே நடைபெற்று வரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை குறித்தும், பரஸ்பரம் பலனளிக்கும் வகையில் அந்த வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இழுபறி மற்றும் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்தாா். இதனால், இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க குழு இந்தியாவுக்கு பயணிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த மாதம் 16-ஆம் தேதி தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை வா்த்தகப் பிரதிநிதி பிரண்டன் லின்ச் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன் பிறகு, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துக்கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ச்சியாக கூறினாா். அதை இந்தியா மறுத்தது.

இந்நிலையில், ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், இறக்குமதி பாதிக்கப்படும் என்பதால், மாற்று வழிகளை இந்தியா திட்டமிட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com