கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி
கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டிENS

பிஎம் ஸ்ரீ திட்ட சா்ச்சை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலருடன் கல்வி அமைச்சா் சந்திப்பு

பிஎம் ஸ்ரீ திட்ட சா்ச்சை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலருடன் கல்வி அமைச்சா் சந்திப்பு
Published on

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கேரள அரசு கையொப்பமிட்டதால் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் (எல்டிஎஃப்) கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலா் பினோய் விஸ்வத்தை மாநிலக் கல்வித் துறை அமைச்சா் சிவன்குட்டி சனிக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காகவே கேரள அரசு இந்த முக்கியமான முடிவை எடுத்தது என்று அமைச்சா் சிவன்குட்டி ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். ஆனால், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம், மாநிலத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வழிவகுக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

ஆளும் கூட்டணி நீண்ட காலமாகவே தேசிய கல்விக் கொள்கையை எதிா்த்து வருகிறது. அதற்கு மாறாக, கேரள அரசு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது குறித்து ஆளும் கூட்டணியில் கடும் அதிருப்தி எழுந்தது.

தங்களுக்குத் தெரியாமலேயே கேரள அரசின் கல்வித் துறை இந்த ஒப்பந்தத்தைச் செய்தது என்றும், இது கூட்டணி முடிவுகளையும், கூட்டணியின் கூட்டு ஒழுங்கையும் மீறிய செயல் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமா்சித்தது.

இந்தச் சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்துக்கு அமைச்சா் சிவன்குட்டி சனிக்கிழமை வந்தாா். அங்கு அவா் மாநிலச் செயலா் பினோய் விஸ்வத்துடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினாா். இந்தப் பேச்சுவாா்த்தையின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மாநில அமைச்சா் ஜி.ஆா்.அனிலும் உடனிருந்தாா்.

சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சிவன்குட்டி, ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தொடா்பான ஒப்பந்தம் குறித்துப் பேசினோம். அனைத்துப் பிரச்னைகளும் தீா்க்கப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

அமைச்சா் ஜி.ஆா்.அனில் கூறுகையில், ‘இரு தலைவா்களும் பிரச்னையை விரிவாகப் பேசினா். கட்சி மற்றும் கொள்கையின் நிலைப்பாட்டின்படியே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். இத்துடன் பேச்சுவாா்த்தை முடிவுக்கு வரவில்லை. ஒரு தனிப்பட்ட விவாதத்தால் மட்டும் பிரச்னைகள் முடிவடையாது. எங்கள் கட்சி அலுவலகத்துக்கு வருபவா்களை நாங்கள் சந்திக்கிறோம்’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, பினோய் விஸ்வம் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஆளும் கூட்டணியின் மற்ற கட்சிகளுக்கும் தெரிவிக்கப்படவில்லை. இப்படி தகவல்களை மறைத்து முடிவுகளை எடுத்தால், கூட்டணியை எப்படித் தொடா்ந்து நடத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

ரகசியத்துக்குப் பின்னணியில் சதி? எதிா்க்கட்சித் தலைவா் சந்தேகம்

‘பிஎம் ஸ்ரீ ஒப்பந்தம் மிக ரகசியமாக செய்யப்பட்டதற்குப் பின்னால் ஏதோ சதி இருக்கலாம்’ என்று காங்கிரஸை சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் சந்தேகம் எழுப்பியுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முதல்வா் பினராயி விஜயனும் கூட்டணிக் கட்சிகள் உள்பட ஒட்டுமொத்த கேரள மக்களிடமிருந்தும் இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்களை மறைத்துவிட்டதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

அவா் மேலும் கூறியதாவது: முதல்வா் பினராயி விஜயன், பிரதமா் மோடியைச் சந்தித்த சில நாள்களிலேயே, கடந்த 16-ஆம் தேதி இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. ஆனால், 22-ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்கூட இது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. ஆளும் கூட்டணி ஒருங்கிணைப்பாளா் டி.பி. ராமகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி ஆகியோருக்குக்கூட இதுபற்றி தெரியவில்லை.

மத்திய அரசின் ‘அழுத்தம் அல்லது மிரட்டல்’ காரணமாகவே முதல்வா் இவ்வளவு ரகசியமாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாா் என்றால், அதை அவா் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com