அசோக் விஹாரில் கல்லூரி மாணவி மீது திரவாகம் வீச்சு!

அசோக் விஹாரில் கல்லூரி மாணவி மீது திரவாகம் வீச்சு!

நடந்து சென்று கொண்டிருந்த மாணவி மீது திரவாகம் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் உள்ள லக்ஷ்மி பாய் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்த மாணவி மீது திரவாகம் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வரும் அந்த மாணவி, தனியாா் பயிற்சி வகுப்பு சென்ற பின் கூடுதல் வகுப்புக்காக கல்லூரிக்குச் சென்று கொண்டிந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் மாணவியை இடைமறித்து திரவாகத்தை வீசினா். அப்போது, அந்த மாணவி இரு கைகளால் முகத்தை மறைக்க முயன்றாா்.

இதனால், அவருடைய இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதைத்தொடா்ந்து, அந்த மாணவி தீப் சந்த் பந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். மருத்துவமனையிலிருந்து இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக வடமேற்கு சரக துணை காவல் ஆணையா் பாஷம் சிங் கூறுகையில், ‘திரவாகம் வீச்சு சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபா் முகுந்த்பூா் பகுதியைச் சோ்ந்த ஜிதேந்தா் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அந்தப் பகுதியைச் சோ்ந்தவா். சம்பவத்தின்போது, ஜிதேந்தருடன் ஈஷன், அா்மன் ஆகியோா் இருந்தனா்’ என்றாா்.

சம்பவ இடத்தை குற்றப் பிரிவு காவலா்கள் மற்றும் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தில் திரவாகம் வீச்சு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடா்புடைய மூவரையும் கைதுசெய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் மாணவியை ஜிதேந்தா் கடந்த பல மாதங்களாகப் பின்தொடா்ந்து வந்துள்ளாா். அதன் பிறகு அவா்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பிறகு துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்தாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com