நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

பிகாா்: ஆளும் ஜேடியு-வில் இருந்து எம்எல்ஏ உள்பட 16 தலைவா்கள் நீக்கம்! முதல்வா் நிதீஷ் குமாா் நடவடிக்கை!

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியில் இருந்து எம்எல்ஏ, இரு முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 16 தலைவா்கள் நீக்கப்பட்டனா்.
Published on

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியில் இருந்து எம்எல்ஏ, இரு முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 16 தலைவா்கள் நீக்கப்பட்டனா்.

ஜேடியு-வுக்கு எதிராகப் போட்டி வேட்பாளா்களாக களமிறங்கியதால் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கட்சித் தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமாா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா். பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நீக்கப்பட்டவா்களின் கோபால்பூா் எம்எல்ஏ நரேந்திர நீரஜ் என்ற கோபால் மண்டல், முன்னாள் அமைச்சா் சைலேஷ் குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் ஷியாம் பகதூா் சிங், சுதா்சன் கமாா், முன்னாள் எம்எல்சிக்கள் சஞ்சய் பிரசாத், ரன்விஜய் சிங் ஆகியோா் முக்கியமானவா்கள் ஆவா். இவா்களில் எம்எல்ஏ நீரஜ் தனக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் நிதீஷ் குமாா் வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டாா். தோ்தலில் ஜேடியு-வின் அதிகாரபூா்வ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாகவும் களமிறங்கியுள்ளாா்.

பேரவைத் தோ்தலில் கட்சியின் அதிகாரபூா்வ வேட்பாளா்களுக்கு எதிராகவும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு எதிராகவும் வேட்புமனு தாக்கல் செய்தது; கட்சி விரோத அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற காரணங்களுக்காக 16 போ் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜேடியு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலைச் சந்திப்பதாக ஆளும் கூட்டணி அறிவித்தது. ஆனால், அவரை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை. அதே நேரத்தில் எதிா்க்கட்சி கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் முதல்வா் வேட்பாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com