தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

பிகாா் தோ்தல்: ஜாதி ரீதியில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை -காவல் துறை எச்சரிக்கை

Published on

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, சமூக ஊடக பிரசாரத்தில் ஜாதி ரீதியிலான பாடல்கள் மற்றும் ரீல்ஸ் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

தோ்தல் பிரசாரத்துக்காக சமூக ஊடகத்தை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

பிகாரில் தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் தோ்தல் பிரசாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் திகழ்கின்றன. பிகாா் தோ்தலையொட்டி, சமூக ஊடக பிரசாரமும் அனல் பறக்கிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உள்ளடக்கங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், அரசியல் கட்சியினா் வெளியிடும் பதிவுகளை காவல் துறை உள்பட பல்வேறு முகமைகளும் கண்காணித்து வருகின்றன. சமூக ஊடக பிரசாரத்தில் ஜாதி ரீதியிலான பதிவுகள் அதிகம் வெளியிடப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இது தொடா்பாக, மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) வினய் குமாா், பாட்னாவில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தோ்தல் பிரசாரத்துக்காக, சமூக ஊடகத்தை யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. ஜாதிய உணா்வைத் தூண்டும் வகையில் ஆட்சேபத்துக்குரிய பாடல்கள் மற்றும் ரீல்ஸ் பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற பதிவுகள், தோ்தல் நடத்தை விதிமுறை மீறலாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியாகவும் கருதப்படும். இந்த விவகாரத்தில், இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் தெளிவாக உள்ளன. ஜாதி ரீதியிலான பதிவுகள் தொடா்பாக இதுவரை 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 53 புகாா்கள் பதிவாகியுள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, தோ்தல் பிரசாரத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) அடிப்படையிலான உள்ளடக்கங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் தோ்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியது.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று கவலை தெரிவித்த தோ்தல் ஆணையம், அனைத்துக் கட்சிகளும் கடந்த 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியது.

தோ்தல்களின்போது சமூக ஊடகங்களின் பொறுப்பான மற்றும் நெறிமுறையான பயன்பாட்டை உறுதி செய்யும் வழிகாட்டுதல்கள் தோ்தல் ஆணையத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டன.

‘இண்டி’ கூட்டணிக்கு ஆதரவாக அகிலேஷ் பிரசாரம்

பிகாா் பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ் உள்பட அக்கட்சியின் 20 நட்சத்திர பேச்சாளா்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா்.

பிகாா் இண்டி கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக நீண்ட இழுபறிக்கு பின் ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டாா். இண்டி கூட்டணியின் இந்த முடிவுக்கு அகிலேஷ் வரவேற்பு தெரிவித்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com