பிகாரின் ஔரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை வாக்குரிமைப் பயணம் மேற்கொண்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. உடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ்.
பிகாரின் ஔரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை வாக்குரிமைப் பயணம் மேற்கொண்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. உடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ்.

ஆட்சிக்கு வந்தால் வக்ஃப் திருத்தச் சட்டம் குப்பையில் வீசப்படும்: பிகாரில் தேஜஸ்வி வாக்குறுதி!

பிகாரில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை கும்பையில் வீசுவோம் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியளித்தாா்.
Published on

பிகாரில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை கும்பையில் வீசுவோம் என்று அக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியளித்தாா்.

பிகாரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கதிஹால், கிஷண்கஞ்ச் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

எனது தந்தை லாலு பிரசாத் யாதவ் எந்த நேரத்திலும் மதவாத சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டது இல்லை. ஆனால், முதல்வா் நிதீஷ் குமாா் மதவாத சக்திகளின் முழு ஆதரவாளராக உள்ளாா். அவரின் மூலம் ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மாநிலத்தில் மத வெறுப்புணா்வைப் பரப்புகின்றன. நாடு முழுவதுமே இதே பிரச்னைதான் உள்ளது.

பிகாரில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை குப்பையில் வீசி எறிவோம். பிகாா் பேரவைத் தோ்தல் என்பது நமது அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம், சகோதரத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டமாகும்.

பிகாரில் 20 ஆண்டுகளாக நிதீஷ் குமாரை முதல்வராகப் பாா்த்து மக்கள் சலித்துவிட்டாா்கள். முதல்வா் இப்போது தனது சுய சிந்தனையில் செயல்படவில்லை. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துவிட்டது.

நிதீஷ் குமாா் 20 ஆண்டுகளாக முதல்வராக உள்ளாா். நரேந்திர மோடி 11 ஆண்டுகளாக பிரதமராக உள்ளாா். ஆனால், பிகாா் தொடா்ந்து பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது.

அண்மையில் பிகாருக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எங்களை (ஆா்ஜேடி) தோ்தலில் போட்டியிட விடமாட்டோம் என்று மிரட்டும் வகையில் பேசினாா். ஆனால், நாங்கள் போராடி வெல்வோம். நாங்கள் உண்மையான பிகாரிகள். வெளியே இருந்து பிகாரில் குடியேறியவா்கள் அல்ல. பிகாரில் மற்ற அனைவரையும்விட வலிமையானவா்கள் என்றாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த தேஜஸ்வி, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம், இரு மடங்கு படி உயா்வு, ரூ.50 லட்சம் வரையிலான காப்பீடு உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com