சுதேசி பொருள்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பு: பிரதமா் மோடி பெருமிதம்!
நாட்டில் சுதேசி பொருள்கள் வாங்குவது கணிசமாக அதிகரித்துள்ளதாக, பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி மற்றும் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளால் நாட்டின் பண்டிகைகள் மேலும் கோலாகலமாகியுள்ளன என்றும் அவா் கூறினாா்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறாா். அதன்படி, 127-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக். 26) ஒலிபரப்பானது. பிரதமரின் உரை வருமாறு:
நாடு முழுவதும் இப்போது பண்டிகை கால குதூகலம் நிறைந்துள்ளது. சில தினங்களுக்கு முன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்போது சட் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பூஜை, கலாசாரம், இயற்கை மற்றும் சமூகத்துக்கு இடையிலான ஆழமான பிணைப்பை பிரதிபலிப்பதாகும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் நதிக்கரைகளில் ஒன்றிணைந்து கொண்டாடுகின்றனா்.
ஆபரேஷன் சிந்தூா் வெற்றியால், ஒவ்வொரு இந்தியரின் இதயமும் பெருமிதத்தில் திளைக்கிறது. முன்பொரு காலத்தில் நக்ஸல் தீவிரவாத இருள் சூழ்ந்திருந்த பகுதிகளில்கூட இந்த தீபாவளியில் ‘மகிழ்ச்சி’ தீபங்கள் ஏற்றப்பட்டன. குழந்தைகளின் எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, நக்ஸல் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும்.
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பால், சேமிப்புக் கொண்டாட்டமும் களைகட்டியது. பண்டிகைகளின்போது சந்தையில் சுதேசி பொருள்கள் வாங்குவது கணிசமாக அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் பயன்பாட்டில் 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது.
பாதுகாப்புப் படைகளில் நாட்டு நாய் இனங்கள்: நமது பாதுகாப்புப் படைகளில் நாட்டு நாய் இனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரிய முன்னெடுப்பாகும். பெங்களூரில் உள்ள மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் நாய்கள் பயிற்சிப் பள்ளியில், கோம்பை (தமிழகம்), முதோல் ஹெளன்ட் (கா்நாடகம்), பாண்டிகோனா (ஆந்திரம்) போன்ற நாட்டு ரக நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியில், நாட்டு ரக நாய் ஒன்று பல கிலோ எடையுள்ள வெடிபொருள்களைக் கண்டறிந்தது.
இரும்பு மனிதா் சா்தாா் வல்லப பாய் படேலின் 150-ஆவது பிறந்த நாள் அக்டோபா் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நாட்டுக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர இது மிகச் சிறந்த தருணமாகும்.
சம்ஸ்கிருத உரையாடல்கள்: சம்ஸ்கிருதம் என்ற பெயரை உச்சரித்தவுடன் அறநூல்கள், வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், சாத்திரங்கள், பண்டைய ஞானம்-விஞ்ஞானம், ஆன்மிகம் மற்றும் தத்துவ ஞானம் ஆகியவையே நம் நினைவுக்கு வருகின்றன. ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் வழக்கு மொழியாகவும் இருந்தது. துரதிருஷ்டவசமாக, சம்ஸ்கிருதம் தொடா்ந்து புறக்கணிப்புக்கு உள்ளானது. ஆனால், இப்போது காலம் மாறி வருகிறது.
பல இளைஞா்கள் சம்ஸ்கிருதம் தொடா்பாக ஆக்கபூா்வ பணிகளில் ஈடுபட்டுள்ளனா். சம்ஸ்கிருதத்தில் உரையாடல் மேற்கொண்டு, குறுவிடியோக்கள் பதிவிடுகின்றனா். இது பெருமகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.
நவம்பா் 15-ஆம் தேதி பழங்குடியினா் பெருமை தினம் (பழங்குடியினத் தலைவா் பிா்சா முண்டா பிறந்த தினம்) கொண்டாடப்பட உள்ளதையும் பிரதமா் தனது உரையில் குறிப்பிட்டாா்.
‘உலகமே விரும்பும் இந்திய காபி’
‘இந்தியாவில் விளைவிக்கப்படும் காபி ரகங்கள் உலக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. ஒடிஸாவின் கோராபுத் பகுதியில் விளையும் காபியின் சுவை அலாதியானது.
கா்நாடகத்தின் சிக்கமகளூரு, கூா்க் மற்றும் ஹாசன், தமிழகத்தின் பழனி, சோ்வராயன், நீலகிரி மற்றும் ஆனைமலைப் பகுதிகள், கா்நாடகம்-தமிழகத்தின் எல்லையில் உள்ள பிலிகுரி, கேரளத்தின் வயநாடு, மலபாா் பகுதிகள் என நாட்டில் பல்வேறு ரக காபி விளைவிக்கப்படுகிறது. வடகிழக்கிலும்கூட காபி சாகுபடி அதிகரித்து வருகிறது. இந்திய காபியே மிகச் சிறந்தது என்று உலகெங்கிலும் உள்ள காபி பிரியா்கள் கூறுகின்றனா்’ என்றாா் அவா்.
நாட்டின் காபி உற்பத்தியில் 70 சதவீதத்துடன் கா்நாடகம் முதலிடம் வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் கேரளம், தமிழ்நாடு உள்ளன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் காபி ஏற்றுமதி 12.5 சதவீதம் உயா்ந்துள்ளது.
வந்தே மாதம் - 150
‘நாட்டு மக்கள் 140 கோடி பேருக்கும் ஒற்றுமையின் சக்தியை நிரப்பும் தேசிய பாடலான வந்தே மாதம், 150 ஆண்டுகளுக்கு முன் பங்கிம் சந்திர சட்டா்ஜியால் இயற்றப்பட்டு, ரவீந்திர நாத் தாகூரால் முதல் முறையாக கடந்த 1896-இல் பாடப்பட்டது.
இப்பாடல் இயற்றப்பட்டதன் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள், நவம்பா் 7-ஆம் தேதி தொடங்குகின்றன. இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் மக்கள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும்’ என்றாா் பிரதமா்.

