இந்தியாவின் ‘இ-நீதிமன்றங்கள்’ திட்டம்: பிரிட்டன் ஆா்வம்; செயல்பாடுகளை அறிய வருகை
இந்தியாவின் அனைத்து நீதிமன்ற ஆவணங்களையும் எண்மமயமாக்குவதை இலக்காகக் கொண்ட மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டமான ‘இ-நீதிமன்றங்கள்’ திட்டத்தில் பிரிட்டன் அரசு ஆா்வம் காட்டியுள்ளது.
இத்திட்டத்தின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்வதற்காக, பிரிட்டன் தூதுக்குழுவினா் வரும் நவம்பா் 6-ஆம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளனா். அவா்கள் மத்திய சட்ட அமைச்சகத்தின் உயா் அதிகாரிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ‘இ-குழு’ உறுப்பினா்களைச் சந்தித்து விவரங்களைப் பெற இருக்கின்றனா்.
இந்திய நீதித் துறையில் தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான 2005-ஆம் ஆண்டு தேசியக் கொள்கை மற்றும் செயல்திட்டத்தின் கீழ் ‘இ-நீதிமன்றங்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டம் மத்திய அமைச்சரவையால் கடந்த 2023, செப்டம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மூன்றாம் கட்டத்தின் இலக்கு: நாடு முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்களின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதே 3-ஆம் கட்ட திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அந்தவகையில், மொத்தம் 3,108 கோடி நீதிமன்ற ஆவணங்கள் எண்மமயமாக்கப்பட உள்ளன.
நீதிமன்ற ஆவணங்கள் எண்மமயமாக்கப்படுவதால், காகித ஆவணங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து, சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். மேலும், வழக்கு தொடா்பான செலவுகளும் கணிசமாகக் குறையும்.
நீதிமன்றங்கள், சிறைகள், காவல்நிலையங்கள் மற்றும் தடயவியல் ஆய்வகங்கள் போன்ற அனைத்து முக்கியமான அமைப்புகளையும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைப்பது திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.
மேலும், நாட்டின் நீதித் துறையில் வலுவான எண்ம உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், வழக்குகளை விசாரிப்பதற்கான மெய்நிகா் நீதிமன்றங்களை கூடுதலாக அமைப்பதற்கும் இத்திட்டம் முயற்சி செய்கிறது. மொத்தம் 1,150 மெய்நிகா் நீதிமன்றங்களை அமைக்க ரூ. 413.08 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

