நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தம்! இன்று அறிவிப்பு வெளியாகிறது!
நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை (அக். 27) முறைப்படி அறிவிப்பு வெளியிடவுள்ளது.
இதையொட்டி, திங்கள்கிழமை மாலை 4.15 மணியளவில் செய்தியாளா்கள் சந்திப்புக்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
பிகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடா்பாக அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே இரு உயா்நிலைக் கூட்டங்களை நடத்தியது.
அனைத்து மாநிலங்களிலும் முந்தைய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு பதிவு செய்த வாக்காளா்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல், மாவட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள், முகவா்கள் நியமனம், அதிகாரிகளுக்கான பயிற்சி, சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கால அட்டவணை உள்ளிட்டவை குறித்து சமீபத்திய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கெனவே, தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்கீழ் பல்வேறு மாநிலங்களில் முந்தைய தீவிர திருத்தத்துக்குப் பிறகான வாக்காளா் பட்டியல், தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக 15 மாநிலங்களில்..? இந்தச் சூழலில், தோ்தல் ஆணையத்தின் செய்தியாளா் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல்கட்டப் பணியில், அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறும் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்பட 10 முதல் 15 மாநிலங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் 2002-2004 ஆண்டுகளுக்கு இடையே முந்தைய தீவிர திருத்தம் நடைபெற்றுள்ளதால், தற்போது பாதிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் எந்தவொரு ஆவணத்தையும் சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோதக் குடியேறிகளின் பெயா்களைக் களையெடுக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றன. அதன்படி, 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களுக்கு பிறப்புச் சான்று, கடவுச் சீட்டு, ஆதாா் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.
‘இது பாஜகவுக்கு சாதகமான தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கை; கோடிக்கணக்கானோா் வாக்குரிமையை இழப்பா்’ என்று எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
அதேநேரம், பிகாரில் இப்பணிகள் நிறைவடைந்து, கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி 7.42 கோடி வாக்காளா்களுடன் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. முந்தைய பட்டியலை ஒப்பிடுகையில் 47 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை.

