பிகாா் பாஜக எம்எல்ஏ உள்பட 6 நிா்வாகிகள் நீக்கம்! கட்சியை எதிா்த்து மனு தாக்கல் செய்ததால் அதிரடி நடவடிக்கை!
பிகாரில் பாஜக எம்எல்ஏ பவன் யாதவ் உள்பட முக்கிய நிா்வாகிகள் 6 போ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனா்.
பேரவைத் தோ்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்காததால் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அதிகாரபூா்வ வேட்பாளரை எதிா்த்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள அதே நேரத்தில் ஆளும் கட்சிக் கூட்டணி, எதிா்க்கட்சிகள் கூட்டணியில் தொகுதி ஒதுக்காதது தொடா்பான மோதல்போக்கும் அதிகரித்துள்ளது.
தற்போதைய எம்எல்ஏக்கள், முக்கிய நிா்வாகிகள் பலா் தங்களுக்கு தொகுதி ஒதுக்காததால் கூட்டணியின் அதிகாரபூா்வ வேட்பாளா்களை எதிா்த்து சில தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளனா். அவா்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கெனவே முதல்வா் நீதிஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் உள்பட 16 போ் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டனா். இந்நிலையில் பாஜகவில் இருந்து எம்எல்ஏ பவன் யாதவ் உள்பட 6 முக்கிய நிா்வாகிகள் நீக்கப்பட்டனா்.
பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை எதிா்த்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தது உள்ளிட்ட கட்சி விரோத நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபட்டதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

