தமிழ்நாடு, 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - தேர்தல் ஆணையம்

நவ. 4 முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும்; இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 7-ல் வெளியிடப்படும்.
ஞானேஷ் குமார்
ஞானேஷ் குமார் PTI
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று (அக். 27) தெரிவித்துள்ளார்.

நவம்பர் 4 ஆம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்றும், வரைவுப் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

பிகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடா்பாக அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே இரு உயா்நிலைக் கூட்டங்களை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர் சந்திப்பில் ஞானேஷ் குமார் பேசியதாவது,

''பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய மாநிலங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளது. 36 மாநிலங்களில் உள்ள தேர்தல் அலுவலர்களுடன் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது.

இதன்படி, இரண்டாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்தமான், கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சத்தீஸ்கர், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நவ. 4 முதல் கணக்கெடுப்பு

12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் 10.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நாளை முதல் நவம்பர் 3 வரை படிவங்கள் அச்சடிப்பு, அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

நவம்பர் 4 ஆம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும்.

வரைவுப் பட்டியல் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும்.

அஸ்ஸாமில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கான தேதி தனியாக அறிவிக்கப்படும்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

3 முறை சோதனை

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. எனவே, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு அதிகாரிகள் நியமிக்கப்படுவார். வாக்குச்சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை வந்து சோதனை செய்வார்கள்.

இன்று நள்ளிரவு முதல் வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நிறுத்தப்படும். இனி சிறப்பு தீவிர திருத்தம் மூலமே 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விளக்க வேண்டும்.

பிறந்த தேதி அல்லது இருப்பிடத்திற்கான சான்றாக ஆதார் அட்டையை ஏற்க முடியாது. ஆதார் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல, இருப்பினும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான அடையாளச் சான்றாக அளிக்கலாம்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்? பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை!

Summary

Chief Election Commissioner Gyanesh Kumar press meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com