

தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஃஷா பாத்திமா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களுக்கு பதிலளிக்காத தில்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி வடகிழக்கு தில்லிப் பகுதியில் நடந்த வன்முறையில் 53 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு, சந்தேக நபர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்தக் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவர்களின் ஜாமீன் மனுக்கள் குறித்து பதிலளிக்க தில்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தில்லி காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, பதிலளிக்க 2 வாரங்கள் காலஅவகாசம் கோரினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ”தில்லி காவல்துறை பதிலளிக்க போதுமான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கில் அக். 27 தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் முன்னதாக தெளிவுபடுத்தியிருந்தோம்.” எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணையே இல்லாமல் சிறையில் இருப்பதை குறிப்பிட்ட நீதிபதிகள், இரண்டு வாரம் அவகாசம் கொடுக்க முடியாது, வெள்ளிக்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.