

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த்தை நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரைத்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் பதவிக் காலம் வரும் நவம்பா் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு கடந்த வாரம் தொடங்கியது.
இந்த நிலையில், முறைப்படி தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த்தை நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றதும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்னர், புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
யார் இந்த சூர்ய காந்த்?
ஹரியாணா மாநிலம் ஹிசாா் மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தில் 1962-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி பிறந்த சூா்ய காந்த், அம்மாநிலத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நபராவார்.
மிகக் குறைந்த வயதில் (38) ஹரியாணா அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தவர் சூர்ய காந்த். 2004 ஆம் ஆண்டு ஹரியாணா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
நீதிபதியான பிறகும் சூர்ய காந்த் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார். 2011 ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
உயர் நீதிமன்ற நீதிபதியாக 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், அக்டோபர் 2018 -ல் இமாசலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர், உச்சநீதிமன்ற நீதிபதியாக 2019-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி பதவியேற்றாா்.
அவா் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னா், அடுத்த 15 மாதங்கள் அப் பதவியை வகிப்பாா். 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-இல் பணி ஓய்வு பெறுவாா்.
முக்கிய தீர்ப்புகள்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கம், பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், ஊழல், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் தொடா்பான பல்வேறு குறிப்பிடத்தக்க தீா்ப்புகளை நீதிபதி சூா்ய காந்த் வழங்கியுள்ளாா்.
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளா் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது; உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் உள்பட அனைத்து வழக்குரைஞா் சங்கங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவையும் இவா் பிறப்பித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.