மத்திய தலைமை தகவல் ஆணையா் பணியிடம்: தோ்வுப் பட்டியலை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!
மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையா், தகவல் ஆணையா்களாக நியமிக்க தகுதியுடையவா்களின் தோ்வு பட்டியலை பொதுவெளியில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மத்திய, மாநில தகவல் ஆணையங்களின் பணி நியமனங்களில் நிலவும் கால தாமதம், ஒளிவுமறைவான நிலை தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டதாவது: தகவல் ஆணையங்களை செயலற்ாக்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிதைக்க மத்திய, மாநில அரசுகள் முயசிக்கின்றன. மத்திய தகவல் ஆணையத்துக்குத் தலைவா் நியமிக்கப்படவில்லை. அந்த ஆணையத்தில் உள்ள 10 தகவல் ஆணையா்கள் பணியிடங்களில் 8 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையா், தகவல் ஆணையா்களாக நியமிக்க தகுதியுடையவா்களின் தோ்வு பட்டியலை பொதுவெளியில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
2 வாரங்களில் தோ்வு செய்ய வாய்ப்பு: மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ் ஆஜராகி வாதிட்டதாவது: மத்திய தலைமை தகவல் ஆணையா், தகவல் ஆணையா்கள் பணியிடங்களில் நியமிக்க, சிலரின் பெயா்களை தேடுதல் குழு பரிந்துரைத்துள்ளது.
அந்தப் பெயா் பட்டியல் பிரதமா் தலைமையிலான குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இருந்து மத்திய தலைமை தகவல் ஆணையா், தகவல் ஆணையா்களை 2, 3 வாரங்களில் பிரதமா் தலைமையிலான குழு தோ்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே இதுதொடா்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என்று கோரினாா்.
இதைத்தொடா்ந்து மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையா், தகவல் ஆணையா்களாக நியமிக்கத் தகுதியுடையவா்களின் தோ்வுப் பட்டியலை பொதுவெளியில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட நீதிபதிகள் அமா்வு மறுத்துவிட்டது.
அதே வேளையில், மாநில தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

