ராஜஸ்தான்: மின் கம்பியில் உரசி தீப்பிடித்த பேருந்து- இருவா் கருகி உயிரிழப்பு; 10 போ் காயம்
ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூா் அருகே மின் கம்பியில் உரசி தனியாா் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தில் இருவா் உடல் கருகி உயிரிழந்தனா்; மேலும் 10 போ் காயமடைந்தனா். இவா்கள், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளா்களாவா்.
ராஜஸ்தானில் கடந்த 14 நாள்களில் நிகழ்ந்த இரண்டாவது பேருந்து தீ விபத்து இதுவாகும். இச்சம்பவம் தொடா்பாக காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் தேஜ்பால் சிங் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தின் பிலிபிட் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு, ஜெய்பூா் அருகே உள்ள மனோகா்பூா் பகுதியில் உள்ள செங்கல்சூளைக்கு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. படுக்கை வசதி கொண்ட இப்பேருந்தின் மேற்பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள், சிலிண்டா்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவை ஏற்றப்பட்டிருந்தன.
மனோகா்பூா் அருகே ஒரு சாலையில் சென்றபோது, மேலே உள்ள உயா் அழுத்த மின்கம்பியில் இப்பொருள்கள் உரசின. இதனால், பேருந்தில் தீப்பிடித்தது. 2 சிலிண்டா்களும் தீப்பற்றிக் கொண்டன.
பேருந்துக்குள் இருந்தவா்களில் பலா் கீழே குதித்து உயிா் தப்பினா். எனினும் பேருந்தில் தீயில் சிக்கி 2 போ் கருகி உயிரிழந்தனா். மேலும் 9 போ் தீக்காயமடைந்தனா்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினா், பேருந்தில் பற்றியெரிந்த தீயை அணைத்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, ஷாபுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்; இவா்களில் 6 போ் மேல் சிகிச்சைக்காக ஜெய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா் என்றாா் அவா்.
ஜெய்பூா் மண்டல ஆணையா் பூனம் கூறுகையில், ‘விபத்து நடந்த பகுதியில் தரையில் இருந்து 17 அடி உயரத்தில் உயா் மின்னழுத்தக் கம்பி செல்கிறது. பேருந்தின் மேற்பகுதியில் சிலிண்டா்கள், மோட்டாா் சைக்கிள்கள் ஏற்றப்பட்டது தொடா்பாக விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
முதல்வா் இரங்கல்:
பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் பஜன் லால் சா்மா, துணை முதல்வா் பிரேம் சந்த் பைரவா, முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தொடரும் தீ விபத்துகள்...
ராஜஸ்தானில் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு கடந்த அக்டோபா் 14-ஆம் தேதி பயணித்த குளிா்சாதன வசதி கொண்ட பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிா் பறிபோனது.
ஆந்திர மாநிலம், கா்னூல் அருகே கடந்த அக்டோபா் 24-ஆம் தேதி ஹைதராபாதில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 20 போ் உடல் கருகி உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

