பிரபல வர்த்தக நிறுவனமான அமேசான் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. செய்யறிவினால் ஒரு பகுதியினருக்கு வேலை எளிதானாலும் மறுபுறம் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமேசான் நிறுவனம் இந்த வாரத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய அளவிலான பணிநீக்க நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் அலுவலகத்தில் மொத்தமாக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரியும் நிலையில் சுமார் 10% ஊழியர்கள் இதன் மூலமாக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதுதொடர்பாக வேலையை விட்டு அனுப்பப்படுவோருக்கு இ-மெயில் அனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில் சுமார் 27,000 பணியாளர்களை அமேசான் பணி நீக்கம் செய்ததே மிகப்பெரிய எண்ணிக்கையாக இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக அமேசான் குறைந்த எண்ணிக்கையிலான பணி நீக்கத்தைச் செய்த நிலையில் இப்போது மனிதவள மேலாண்மை, சேவைகள், ஏடபிள்யூஎஸ் தொழில்நுட்பப் பிரிவு ஆகிய துறைகளில் பணியாளர்களைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மேலாளர்கள் போன்ற உயர் அதிகாரிகளும் அடங்குவர்.
செய்யறிவு தொழில்நுட்பத் தேவை, செலவினக் குறைப்பு ஆகியவை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
கரோனா காலத்தில் அதிக ஆன்லைன் ஆர்டர்களுக்காக கூடுதலாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டதும் காரணம் என்று நிறுவனம் கூறுகிறது.
அதேநேரத்தில் சுமார் 2 லட்சம் தற்காலிக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 216 நிறுவனங்களில் இருந்து 98,000 தொழில்நுட்பப் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.