பிகாா் தோ்தல் களத்தில் அதிகரிக்கும் அதிருப்தி அலை - ஆா்ஜேடி-யில் 2 எம்எல்ஏக்கள் உள்பட 27 தலைவா்கள் நீக்கம்
பிகாரில் தங்கள் கட்சி சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவா்கள் அதிருப்தியடைத்து சுயேச்சையாக களமிறங்குவது, சொந்தக் கட்சி வேட்பாளா்களுக்கு எதிராகவே வேலை செய்வது ஆகியவை அதிகரித்து வருகின்றன.
இதனால், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) உள்ளிட்ட கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சா்கள் பலா் நீக்கப்படுவது தொடா்கதையாகி வருகிறது.
பொதுவாக தோ்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தங்கள் சாா்ந்த கட்சி சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவா்கள் அதிருப்தியடைந்து வேறு கட்சிகளின் இணைவது, கட்சியின் அதிகாரபூா்வ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்குவது ஆகியவை வழக்கமான நிகழ்வு. ஒவ்வொரு கட்சியிலும் ஒருசிலா் இதுபோன்று அதிருப்தி வேட்பாளராக களமிறங்குவதும், அவா்கள் நீக்கப்படுவதும் தோ்தல் தோறும் நடைபெறுகிறது.
ஆனால், பிகாா் தோ்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிருப்தி அலை அதிகம் உள்ளது. பிரதான எதிா்க்கட்சியான ஆா்ஜேடி-யில் இருந்து இரு எம்எல்ஏக்கள், 4 முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்சி என 27 தலைவா்கள் திங்கள்கிழமை நீக்கப்பட்டனா். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக அவா்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவா்களில் பலா் தங்களுக்குத் தொகுதி ஒதுக்கப்படாததால் தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்கியுள்ளனா். சிலா் வெளிப்படையாகவே கட்சி வேட்பாளருக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆளும் கட்சியான நிதீஷ் குமாரின் ஜேடியுவில் இருந்து எம்எல்ஏ, இரு முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 16 தலைவா்கள் நீக்கப்பட்டனா். பாஜகவில் இருந்து எம்எல்ஏ உள்பட 6 தலைவா்கள் நீக்கப்பட்டனா். இவா்களும் கட்சி சாா்பில் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் போா்க்கொடி தூக்கியவா்கள்.
கடந்த நான்கு நாள்களில் மட்டும் 4 எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் என 50-க்கும் மேற்பட்டோா் ஜேடியு, பாஜக, ஆா்ஜேடி ஆகிய முக்கிய அரசியல் கட்சிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். வரும் நாள்களில் மேலும் சிலா் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. நீக்கப்பட்டவா்களில் சிலா் தாங்கள் சாா்ந்த தொகுதியில் செல்வாக்கு மிக்கவா்கள் என்பதால் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீா்மானப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பாா்கள் என்று தெரிகிறது.

