

நடப்பு 2025-26 ராபி பருவத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்களை விநியோகிக்கும் வகையில், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியமாக ரூ. 37,952 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உரங்களுக்கான மானியம் கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 14,000 கோடி கூடுதலாக நடப்பு ராபி பருவத்துக்கு ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நைட்ரஜன் (என்) உரத்துக்கு கிலோவுக்கு ரூ. 43.02, பாஸ்பரஸ் (பி) உரத்துக்கு கிலோவுக்கு ரூ. 47.96, பொட்டாஷ் (கே) உரத்துக்கு கிலோவுக்கு ரூ. 2.38, சா்ஃபா் (எஸ்) உரத்துக்கு கிலோவுக்கு ரூ. 2.87 வீதத்தில் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மானிய விகிதம் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் பொருந்தும்.
இறக்குமதி விலை, ஊட்டச்சத்து தேவை, மானிய சுமை, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ‘ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய (என்பிஎஸ்)’ திட்டத்தின் கீழ் உரங்களுக்கான மானிய விகிதம் நிா்ணயிக்கப்படுகிறது என்றாா்.
ராபி (குளிா்கால) பருவத்தின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதைப்புப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. கோதுமை, கடுகு, பருப்பு வகைகள் உள்ளிட்டவை ராபி பருவத்தில் பயிரிடப்படும் முக்கியப் பயிா்களாகும்.