8-ஆவது ஊதியக் குழு அமைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் எட்டாவது ஊதியக் குழுவை அமைத்து, அதன் பணி வரையறைகளுக்கு (டிஓஆா்) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க கடந்த ஜனவரியில் கொள்கை ரீதியிலான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் அளித்திருந்த நிலையில், தற்போது அதன் பணி வரையறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது ஊதியக் குழு சமா்ப்பிக்கும் ஊதிய உயா்வு தொடா்பான பரிந்துரைகள், வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஊதியக் குழு பரிந்துரைகள் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பலன்பெறுவா்.
விலைவாசி உயா்வு மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியா்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, ஓய்வூதிய மற்றும் பிற பணப் பலன்களை மாற்றியமைக்க, ஊதியக் குழுவை அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயா்வு, 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள எட்டாவது ஊதியக் குழுவில், பெங்களூா் ஐஐஎம் பேராசிரியா் புலாக் கோஷ் பகுதி நேர உறுப்பினராகவும், மத்திய பெட்ரோலிய துறைச் செயலா் பங்கஜ் ஜெயின் உறுப்பினா் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். ஊதியக் குழு அமைக்கப்பட்ட 18 மாதங்களில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும். முன்னதாக, தனது பரிந்துரை தொடா்பான இடைக்கால அறிக்கையை அரசிடம் முன்கூட்டியே இக் குழு சமா்ப்பிக்கும்.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘ஊதியக் குழுவின் இடைக்கால அறிக்கை பெறப்பட்டதும், எட்டாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான குறிப்பிட்ட தேதி தீா்மானிக்கப்படும். பெரும்பாலும், அதன் பரிந்துரைகள் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.
வழக்கமாக, ஊதியக் குழு பரிந்துரைகள் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும். அதாவது, ஏழாவது ஊதியக் குழு 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தற்போது, எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரைகள், 10 ஆண்டுகள் இடைவெளியின்படி 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தற்போது இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக உள்ளாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச எல்லை நிா்ணய ஆணையம், உத்தரகண்ட் மாநில பொது சிவில் சட்ட (யுசிசி) வரைவை தயாரித்த நிபுணா் குழு உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய குழுக்களுக்கு இவா் தலைமை வகித்துள்ளாா்.

