

நமது நிருபர்
தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னையை குறைக்க செயற்கை மழையை பொழியச் செய்வதற்கான சோதனை முயற்சி 53 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
ஐஐடி கான்பூர் விமான ஓடுபாதையிலிருந்து பிற்பகல் 12.13 மணியளவில் புறப்பட்ட விமானம் கேக்ரா, வடக்கு கரோல் பாக், மயூர் விஹார், சதாக்பூர், போஜ்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மேகங்களில் ரசாயனங்களைத் தூவியது.
இரண்டாவது சோதனை முயற்சி மீரட் விமான ஓடு பாதையில் இருந்து மாலை 3.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. கேக்ரா, போஜ்பூர், மோதி நகர், மீரட் ஆகிய பகுதிகளில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இதையடுத்து, நொய்டாவில் மாலை 4 மணிக்கு 0.1 மி.மீ. மழையும், கிரேட்டர் நொய்டாவில் மாலை 4 மணிக்கு 0.2 மி.மீ. மழையும் பதிவானது. இதனால் சுமார் 20 இடங்களில் காற்று மாசு சற்று குறைந்ததாக தில்லி அரசு தெரிவித்தது. அடுத்த சில நாள்களில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: மேகங்களில் ரசாயனங்களைத் தூவுவதற்காக செஸ்னா விமானம் கான்பூரிலிருந்து புறப்பட்டது. வானில் அரை மணி நேரம் பறந்த விமானம், எட்டு தீப்பிழம்புகளை வெளியிட்டது. சோதனை முடிந்த 15 நிமிஷங்கள் முதல் 4 மணி நேரத்திற்குள் மழை பெய்யக்கூடும் என்று ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது. இரண்டாவது சோதனை புறநகர் தில்லியில் பிற்பகலில் நடத்தப்பட்டது. அடுத்த சில நாள்களில் ஒன்பது முதல் பத்து சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இது வெற்றிகரமாக நடந்தால், ஒரு நீண்ட கால திட்டத்தை தயாரிப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.