தீவிர புயலாக கரையைக் கடக்கும் மோந்தா புயல்! அறிய வேண்டிய 10 விஷயங்கள்!!

தீவிர புயலாக கரையைக் கடக்கும் மோந்தா புயல் பற்றி அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள்!!
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்
Published on
Updated on
2 min read

சென்னை: வங்கக் கடலில் உருவாகி, ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தீவிர புயல் மோந்தா காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மோந்தா தீவிர புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிர புயலாக மாறியிருக்கும் மோந்தா, கரையைக் கடக்கும் போது, காற்றின் வேகமானது மணிக்கு 110 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மின் கம்பங்கள், மரங்கள் சாயலாம் என்றும் சில கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோந்தா புயல் குறித்து அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

மோந்தா புயலானது, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உருவான முதல் புயல் சின்னமாகும். காக்கிநாடா அருகே செவ்வாய்க்கிழமை இரவில் மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே இது கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஆந்திர மாநில கடற்கரை மாவட்டங்களில் மி கன மழை முதல் அதி கனமழை பெய்யும் என்றும், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, எலுரு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் மழை காரணமாக ஒருவருக்கும் பாதிப்பில்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தீவிர பாதிப்புக்குள்ளாகும் இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரசவ காலம் நெருங்கும் நிலையில் இருக்கும் 787 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

11 தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், 12 மாநில பேரிடர் மீட்புப் பணியினரும் ஆந்திரத்தில் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு குழுவும் படகுகள், உயிர்காக்கும் உடைகள், மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன. இவர்கள் தரப்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

புயல் கரையைக் கடந்த பிறகு, மின் கம்பங்களை சரி செய்ய, விழுந்த மரங்களை அப்புறப்படுத்த மின் வாரிய தொழிலாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆந்திரத்தில் கரையைக் கடந்தாலும் ஒடிசாவிலும் பயங்கர பாதிப்பு ஏற்படும் என்றும் எட்டு தெற்கு மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்படலாம் என்பதால் 3000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 1,496 கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக். 30 வரை இந்த மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா விமான நிலையம் விமானப் போக்குவரத்தை ரத்து செய்திருக்கிறது.

கனமழை காரணமாக, விசாகப்பட்டினம் வழியாகச் செல்லும் 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமானங்கள் புவனேஸ்வரத்துக்கு திருப்பி விடப்பட்டன.

ஒடிசாவில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் பத்திரமாக இருக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் மக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்ச்சேதம் இல்லாதவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதன்கிழமை மாலைதான் தீவிரப் புயல் வலுவிழக்கிறது என்பதால், மக்கள் தொடர்ந்து புயல் குறித்த தகவல்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Summary

Important things to know about Cyclone Mondha, which is making landfall as a severe storm!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com