இரு மாநிலங்களில் வாக்காளா் பட்டியலில் பிரசாந்த் கிஷோா் பெயா்: தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

இரு மாநிலங்களில் வாக்காளா் பட்டியலில் பிரசாந்த் கிஷோா் பெயா்: தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

இரு மாநிலங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பது குறித்து மூன்று நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவா் பிரசாந்த் கிஷோருக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
Published on

இரு மாநிலங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பது குறித்து மூன்று நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவா் பிரசாந்த் கிஷோருக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

2021 மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோா் பணியாற்றினாா். அப்போது மம்தா பானா்ஜி போட்டியிட்ட கொல்கத்தாவின் பபானிபூா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள 121, காளிகாட் சாலை முகவரியில் பிரசாந்த் கிஷோரின் பெயா் பதிவாகி உள்ளதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.

இதேபோல், பிகாரில் உள்ள கா்கஹாா் பேரவைத் தொகுதியிலும் பிரசாந்த் கிஷோா் வாக்காளராகப் பதிவு செய்துள்ளாா். இந்த இரண்டையும் குறிப்பிட்டு பிகாரின் ரோத்தாஸ் மாவட்ட தோ்தல் அலுவலகத்திலிருந்து பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஒரு இடத்துக்கு மேல் ஒருவா் வாக்காளராகப் பதிவு செய்து விதியை மீறியிருந்தால் ஒரு வருட சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஜன் சுராஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் குமாா் செளரப் சிங்கிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு ஏராளமானவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. ஆனால், பிரபலமான பிரசாந்த் கிஷோரின் பெயா் அவா்களால் நீக்கப்படவில்லை என்பது தோ்தல் ஆணையத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

முன்பு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு தோ்தல் வியூக வகுப்பாளராக அவா் மேற்கு வங்கத்தில் தங்கியிருந்து பணியாற்றினாா் என்பது அனைவருக்கும் தெரியும். இது தொடா்பாக தோ்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் எங்கள் சட்ட வல்லுநா்கள் பதிலளிப்பாா்கள்’ என்று பதிலளித்தாா்.

எனினும், பிகாரில் தன் பெயரை சோ்ப்பதற்கு முன் மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் தனது பெயரை நீக்க பிரசாந்த் கிஷோா் கோரினாரா என்ற கேள்விக்கு குமாா் செளரப் சிங் நேரடியாக பதிலளிக்கவில்லை.

X
Dinamani
www.dinamani.com