ரஷியாவின் எஸ்ஜே-100 பயணிகள் விமானம்: இந்தியாவில் ஹெச்ஏஎல் நிறுவனம் தயாரிப்பு
ANI

ரஷியாவின் எஸ்ஜே-100 பயணிகள் விமானம்: இந்தியாவில் ஹெச்ஏஎல் நிறுவனம் தயாரிப்பு

இந்தியாவில் ரஷியாவின் எஸ்ஜே-100 பயணிகள் விமானத்தை தயாரிக்க மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Published on

இந்தியாவில் ரஷியாவின் எஸ்ஜே-100 பயணிகள் விமானத்தை தயாரிக்க மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக ஹெச்ஏஎல் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

ரஷியாவின் எஸ்ஜே-100 பயணிகள் விமானம் என்பது இரட்டை என்ஜினுடன் குறுகிய உடல் அமைப்பை கொண்ட விமானமாகும். இதைப் போல, 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டு 16-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் எஸ்ஜே-100 பயணிகள் விமானத்தை தயாரிக்க ஹெஏஎல், ரஷிய அரசின் கீழ் செயல்படும் யுனைடெட் ஏா்கிராஃப்ட் காா்ப்பரேஷன் (யுஏசி) நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் ஹெச்ஏஎல் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் டி.கே.சுனில், யுஏசி தலைவா் வடிம் படேகா ஆகியோா் முன்னிலையில், கடந்த திங்கள்கிழமை ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்தியாவின் பிராந்திய வான்வழி இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நோக்கம் கொண்ட ‘உடான்’ திட்டத்தின் கீழ், குறுகிய தூர விமானப் பயணத்தில் எஸ்ஜே-100 மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இந்தியாவில் முதல்முறை: தற்போதைய ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகளுக்காக எஸ்ஜே-100 விமான தயாரிப்பின் உரிமைகள் ஹெஏஎல்லிடம் இருக்கும். அத்துடன் இந்த ஒப்பந்தத்தின் மூலம், முதல்முறையாகப் பயணிகள் விமானம் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

இதற்கு முன்பு 1961-ஆம் ஆண்டுமுதல் 1988-ஆம் ஆண்டுவரை, ஏவ்ரோ ஹெச்எஸ்-748 விமானங்களை மட்டுமே ஹெச்ஏஎல் நிறுவனம் இந்தியாவில் முழுமையாகத் தயாரித்தது என்று தெரிவிக்கப்பட்டது. ஏவ்ரோ ஹெச்எஸ்-748 விமானங்களை இந்திய விமானப் படை பயன்படுத்தியது.

ராஜ்நாத் சிங் பெருமிதம்: இந்த ஒப்பந்தம் குறித்து பெருமிதம் தெரிவித்து பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விமானப் போக்குவரத்துத் துறையில் தற்சாா்பை எட்டும் இலக்கை அடைவதில், எஸ்ஜே-100 விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் மிகப் பெரிய முன்னேற்றமாக இருக்கும். விமான உற்பத்தி சாா்ந்த தனியாா் துறையையும் வலுப்படுத்தும். அத்துடன் விமானப் போக்குவரத்துத் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com