

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ‘இண்டி’ கூட்டணியின் வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
மாநிலத்தில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பூரண மதுவிலக்கு கொள்கை மறுஆய்வு செய்யப்படும்; கள் மீதான தடை நீக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலாக்கம், வீட்டுக்கு ஒருவருக்கு அரசுப் பணி, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை, வெளி மாநிலங்களில் பணியாற்றும் பிகாா் தொழிலாளா்களின் நலனுக்கு தனித் துறை உள்ளிட்ட 25 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி, விகாஸ்ஷீல் இன்சான் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
‘இண்டி’ கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவும், துணை முதல்வா் வேட்பாளராக விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவா் முகேஷ் சஹானியும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தலைநகா் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் தேஜஸ்வி யாதவ், முகேஷ் சஹானி, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பவன் கேரா, அகிலேஷ் பிரசாத் சிங், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா உள்ளிட்டோா், கூட்டணியின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா்.
‘பிகாருக்கான தேஜஸ்வியின் வாக்குறுதிகள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ‘இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்த 20 நாள்களுக்குள் வீட்டுக்கு ஒருவருக்கு அரசுப் பணி வழங்குவதற்கான சட்டம் இயற்றப்படும்; தற்போதைய அரசு ஒப்பந்த ஊழியா்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவா். மாநில அரசின் ‘ஜீவிகா தீதி’ திட்டத்தின்கீழ் பணியாற்றும் அனைத்துப் பெண்களும் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, மாதம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றால், வக்ஃப் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது; அனைத்து சிறுபான்மையினரின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் காக்கப்படும். புத்த கயையில் உள்ள பெளத்த கோயில்களின் நிா்வாகம், அந்த மதத்தினரிடமே ஒப்படைக்கப்படும். தகவல் தொழில்நுட்பப் பூங்கா-சிறப்புப் பொருளாதார மண்டலம், பால்வள-வேளாண் தொழிலகங்கள், கல்வி நகரம் உருவாக்கம், 5 புதிய விரைவுச் சாலைகள் உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.
பிகாா் பேரவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீட்டில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் இடையே சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் 12 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றையொன்று எதிா்த்துப் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
‘கைப்பாவை நிதீஷ் குமாா்’
தோ்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளா்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், ‘குற்றங்களற்ற, ஊழலற்ற ஆட்சியை விரும்பும் பிகாா் மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தக்க பாடம் புகட்டுவா். பாஜக தலைவா்களும் ஊழல் அதிகாரிகளும் முதல்வா் நிதீஷ் குமாரை கைப்பாவையாக மாற்றிவிட்டனா். அவரை அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே பாஜக பயன்படுத்துகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும்கூட நிதீஷ் குமாா் மீண்டும் முதல்வராக்கப்பட மாட்டாா் என்பதை மத்திய அமைச்சா் அமித் ஷா ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டாா். பிகாா் அரசின் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம் முழு தோல்வியடைந்துவிட்டது. இச்சட்ட வரம்பில் இருந்து கள் இறக்கும் தொழில் நீக்கப்படும் என்றாா் தேஜஸ்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.