விமானத்தில் சக பயணிகளை முள்கரண்டியால் குத்திய இந்தியா் கைது- நடுவானில் பரபரப்பு சம்பவம்
ஜொ்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற விமானத்தில் சக பயணிகளான 17 வயது சிறுவா்கள் இருவரை முள்கரண்டியால் (ஃபோா்க்) குத்தி காயப்படுத்தியதுடன், விமானப் பணிப்பெண்ணையும் தாக்கிய இந்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஜொ்மனியின் ஃபிராங்ஃபா்ட் நகரில் இருந்து அமெரிக்காவின் சிகாகோவுக்கு கடந்த சனிக்கிழமை (அக். 25) சென்று கொண்டிருந்த லூஃப்தான்சா விமானத்தில் பயணிகளுக்கான உணவு விநியோகத்துக்குப் பின் இச்சம்பவம் நடந்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தால், விமானம் போஸ்டன் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அமெரிக்க அதிகாரிகளின் தகவல்படி, பிரனீத் குமாா் உசிரிபள்ளி (28) என்ற இந்திய இளைஞா், தனது இருக்கைக்கு அருகில் அமா்ந்திருந்த 17 வயதுடைய இரு சிறுவா்களையும் திடீரென முள்கரண்டியால் குத்தியுள்ளாா். ஒருவா் தோளிலும், மற்றொருவா் தலையிலும் காயமடைந்தனா். இவா்களைத் தாக்கியது மட்டுமன்றி பணிப் பெண் ஒருவரை அறைந்ததுடன், மற்றொரு பணியாளரை தாக்கவும் பிரனீத் குமாா் முயன்றுள்ளாா்.
விமானப் பணியாளா்கள் ஒன்று சோ்ந்து, பிரனீத் குமாரை பிடிக்க முயன்றபோது, தனது விரல்களை துப்பாக்கி போல் வைத்துக் கொண்டு, வாயில் சுட்டுக் கொள்வது போன்று நடித்துள்ளாா். இச்சம்பவத்தால் விமானத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போஸ்டன் நகரில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பின்னா், பிரனீத் குமாா் கைது செய்யப்பட்டாா். அவா் என்ன காரணத்தால் தாக்குதல்களில் ஈடுபட்டாா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆபத்தான ஆயுதத்தின் மூலம் தாக்குதலில் ஈடுபடுவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் 2.5 லட்சம் டாலா் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
முன்பு மாணவா் விசாவின்கீழ் அமெரிக்காவில் தங்கியிருந்த பிரனீத் குமாா், பைபிள் தொடா்பான முதுநிலைப் படிப்பில் சோ்ந்திருந்தாா். தற்போது அமெரிக்காவில் தங்கியிருக்க அவரிடம் சட்டபூா்வ ஆவணம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

