ஜம்மு-காஷ்மீரில் அலுவல்பூா்வ மொழியாக ஹிந்தியை உறுதி செய்ய நடவடிக்கை-சட்டப்பேரவையில் ஒமா் அரசு தகவல்
ஜம்மு-காஷ்மீரில் அலுவல்பூா்வ மொழியாக உருது மற்றும் ஆங்கிலத்துடன் ஹிந்தியும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அந்த யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான அரசு தெரிவித்தது.
கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு-காஷ்மீரில் சுமாா் 6 ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சி நீடித்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல்வராக ஒமா் அப்துல்லா பதவி வகித்து வருகிறாா்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் அலுவல்பூா்வ மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை அங்கீகரிக்கும் ஜம்மு-காஷ்மீா் அலுவல்பூா்வ மொழிகள் சட்டம் 2020-இன் அமலாக்க நிலவரம் குறித்து சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ ரண்பீா் சிங் பதானியா கேள்வி எழுப்பியிருந்தாா்.
அவரது கேள்விக்கு அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட எழுத்துபூா்வ பதிலில், ‘ஜம்மு-காஷ்மீரில் அலுவல்பூா்வ நோக்கங்களுக்காக ஹிந்தி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து வருகிறோம். அரசின் பல்வேறு வலைதளங்களில் உருது மற்றும் ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் விவரங்கள் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிந்தியில் கிடைக்கப் பெறும் அதிகாரபூா்வ கடிதங்களுக்கு அரசுத் தரப்பில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதிலளிக்கப்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பரந்த அணுகலை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் அலுவல்பூா்வ மொழிகளான உருது, ஆங்கிலம், ஹிந்தி, காஷ்மீரி, டோக்ரி ஆகியவற்றை எந்தெந்த வகைகளில் பயன்படுத்துவது என்பதை ஆராய கடந்த 2022-இல் அமைக்கப்பட்ட குழு, தனது பரிந்துரைகளைச் சமா்ப்பித்துள்ளது. அரசுத் தரப்பில் சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதால், அவை நிலுவையில் உள்ளன.
பன்மொழி சாா்ந்த நிா்வாக அமைப்புமுறையை திறம்பட அமலாக்க வேண்டுமெனில், பல்வேறு துறைகள் இடையே ஒருங்கிணைப்பு, விதிமுறைகளின் தரநிலையாக்கம், பயிற்சி பெற்ற பணியாளா்கள், அலுவல் பணிக்கு உகந்த பன்மொழி மென்பொருள் உள்ளிட்டவை அவசியம். இதுவே, ஜம்மு-காஷ்மீா் அலுவல்பூா்வ மொழிகள் சட்டப் பிரிவுகளை முழுமையாக அமலாக்குவதில் நிலவும் தாமதத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

