

பெண் விவசாயி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாஜக எம்பி கங்கனா ரணாவத் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தில்லியில் கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 73 வயது பெண் விவசாயி மஹிந்தர் கெளர் என்பர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை கங்கனா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “இதுபோன்ற பெண்கள் ரூ. 100-க்கு போராட்டத்தில் கலந்துகொள்ள கிடைப்பார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கங்கனாவின் பதிவு தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக பதிண்டா நீதிமன்றத்தில் மஹிந்தர் கெளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் கங்கனா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்திலும் கங்கனாவின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.
இதனிடையே, பலமுறை சம்மன் அனுப்பியும் கங்கனா நேரில் ஆஜராகாத நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது காணொலி காட்சி மூலம் ஆஜராக கங்கனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், கங்கனாவின் கோரிக்கையை நிராகரித்த பதிண்டா நீதிமன்றம், அக். 27 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று (அக். 27) பதிண்டா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான கங்கனா ரணாவத், தான் அந்த பதிவை எழுதவில்லை என்றும் ரீட்வீட் மட்டுமே செய்ததாக தெரிவித்தார். மேலும், தனது தவறை உணர்ந்து பெண் விவசாயிடம் மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றத்தில் கங்கனா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கங்கனாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை நவ. 24 ஆம் தேதி ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.