

பிகார் இளைஞர்களின் விருப்பங்களை சிதைத்ததுடன் அந்த மாநிலத்தை மோடி-நிதீஷ் அரசு கைவிட்டுவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சில தினங்களுக்கு முன்பு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிகார் இளைஞர்களுடன் நான் விரிவாக கலந்துரையாடினேன். அனைத்துத் துறைகளிலும் அந்த மாநிலத்தின் நிலை மோசமாக இருப்பதற்கு அங்கு ஆட்சியில் உள்ள பாஜக-ஐக்கிய ஜனதா தளம் அரசுதான் பொறுப்பு.
கடந்த 20 ஆண்டுகளில் தங்கள் விருப்பங்களை சிதைத்ததுடன், மாநிலத்தைக் கைவிட்டதற்கும் மோடி-நிதீஷ் அரசுதான் பொறுப்பு என்பது பிகார் இளைஞர்களுக்குத் தெரியும்.
கல்வித் துறையில் மாணவர்கள் பள்ளிகளைவிட்டு இடைநிற்கும் போக்கு மற்ற மாநிலங்களைவிட பிகாரில் அதிகமாகக் காணப்படுகிறது. பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை பட்டியலில் மொத்தமுள்ள 29 மாநிலங்களில் பிகார் 28-ஆவது இடத்தில் உள்ளது. அதேபோன்று பெண்கள் எழுத்தறிவு பெறும் விகிதத்திலும் 29 மாநிலங்களில் பிகார் 28-ஆவது இடத்தில் உள்ளது.
வேலைவாய்ப்பு விவகாரத்தில், சேவைத் துறை வேலைவாய்ப்பில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பிகார் 21-ஆவது இடத்தில் உள்ளது; தொழில் துறை/உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் அந்த மாநிலம் 23-ஆவது இடத்தில் உள்ளது.
சிசு மரணங்களை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது 29-இல் 27 என்ற இடத்தில் பிகார் உள்ளது. வீடுகளுக்கு கழிப்பறை வசதி என்று பார்த்தால் பிகார் கடைசி இடத்தில் உள்ளது. மனித வளர்ச்சி குறியீட்டில் 27-ஆவது இடத்திலும், தனிநபர் வருமான விவகாரத்தில் 25- ஆவது இடத்திலும் பிகார் உள்ளது.
இவை வெறும் எண்கள் அல்ல; மாறாக பிகாரிலும் மத்தியிலும் ஆளும் அரசுகள் பிகாரை முன்னேறவிடாமல் எவ்வாறு சீரழித்துள்ளன என்பதைக் காட்டும் கண்ணாடிகள். நான் சந்தித்த பிகார் இளைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள் மட்டுமின்றி அறிவாளிகளும் ஆவர். அவர்கள் தங்கள் திறமை மற்றும் கடும் உழைப்பால் எங்கும் ஜொலிக்கக் கூடியவர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பதற்கு பதிலாக வேலைவாய்ப்பின்மையை பிகார் அரசு அளித்துள்ளது.
எனினும், தற்போது மாற்றத்துக்கான நேரம் வந்துள்ளது. பிகாரின் பெருமிதத்தை தட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. மேலும், நீதிக்கான மகா கூட்டணியின் உறுதியை நிலைநிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும் என்று ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பிகாரைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் தன்னை புது தில்லியில் அண்மையில் சந்தித்த காட்சி அடங்கிய விடியோவையும் அவர் தனது பதிவுடன் இணைத்துள்ளார். அதில், "பிகாரைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்களா?' என்று ராகுல் கேட்பதற்கு மாணவர்கள் "ஆம்' என்று பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பிகார் சட்டப் பேரவைக்கு வரும் நவ.6 மற்றும் 11-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவ. 14-ஆம் தேதி நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.