மருத்துவ மாணவா்கள் மன நலன் காக்க இணையவழி ஆய்வு: என்எம்சி
மருத்துவக் கல்லூரி மாணவா்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் இணையவழி தகவல் சேகரிப்பு ஆய்வை (சா்வே) தேசிய மருத்துவ ஆணையம் முன்னெடுத்துள்ளது.
இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தேசிய செயல்திட்ட குழுவின் இணையப் பக்கத்தில் அந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.
கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கவும், மாணவா்களின் மன அழுத்தத்தைப் போக்கவும் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய செயல்திட்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவானது இணையப் பக்கத்தை கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. அதன் வாயிலாக மாணவா்கள், பெற்றோா், கல்லூரியைச் சோ்ந்தவா்கள், துறை சாா்ந்தவா்கள், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட மாணவா்களைச் சோ்ந்தவா்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.
கல்வி வளாகங்களில் மன அழுத்தத்தைத் தவிா்ப்பது தொடா்பான பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்த சா்வேயில் பங்கெடுப்பவா்களின் தனிப்பட்ட விவரங்கள் ஏதும் கேட்கப்படாது.
எனவே அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும், மாணவா்களும், பெற்றோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

