

இந்தியர்களுக்கு 'சாட்ஜிபிடி கோ' சேவையை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குவதாக ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்யறிவு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் நிலையில் அதனைப் பயன்படுத்த ஏஐ நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அடிப்படை வசதிகளுடன் சில செயலிகள் இலவசமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரபல ஏஐ உருவாக்கமான சாட்ஜிபிடியும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, இலவசமாக பயன்படுத்தும் 'சாட்ஜிபிடி ப்ரீ', கட்டணங்களுடன் பயன்படுத்தும் 'சாட்ஜிபிடி கோ' மற்றும் 'சாட்ஜிபிடி பிளஸ்' என பல வகைகளில் அறிமுகப்படுத்தியது.
இதில் 'சாட்ஜிபிடி கோ' சாட்பாட்டை(chatbot) பயன்படுத்த மாதம் ரூ. 399 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியர்களுக்கு இதனை ஓராண்டுக்கு இலவசமாக வழங்க ஓப்பன்எஐ நிறுவனம் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வருகிற நவம்பர் 4 ஆம் தேதி முதல் 'சாட்ஜிபிடி கோ' இலவசமாக பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் ஏற்கெனவே கணக்கு உள்ளவர்கள் மட்டுமின்றி புதிய பயனர்களும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'சாட்ஜிபிடி ப்ரீ'யைவிட 'சாட்ஜிபிடி கோ'வில் சில நவீன அம்சங்கள் உள்ளன. ஜிபிடி - 5 மாடலில் இது வேலை செய்கிறது. அதி விரைவாக தகவல்களைத் தருவது, கோப்புகளை ஆய்வு செய்வது என பல வேலைகளைச் செய்யும். பயனர்களின் கடினமான கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.
கடந்த ஆகஸ்டில் சாட்ஜிபிடி கோ சேவை தொடங்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்குள் இதன் பயனர்கள் இரட்டிப்பாகியுள்ளனர். இந்தியா, சாட்ஜிபிடியின் இரண்டாவது பெரிய சந்தையாக விரைவில் மாறும் என்று ஓப்பன்ஏஐ நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக இந்தியர்களுக்கு ஓராண்டுக்கு இந்த சேவை இலவசமாக வழங்குவதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.