ராஜஸ்தானின் புஷ்கா் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈா்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கா் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பாா்வையாளா்களின் கவனத்தை ஈா்த்துள்ளன.
இந்தக் கண்காட்சி அதிகாரபூா்வமாக வரும் அக்டோபா் 30-ஆம் தேதி தொடங்கி, நவம்பா் 5-ஆம் தேதி வரை நடைபெறவிருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வா்த்தகா்களின் வருகையால் கண்காட்சித் திடல் தற்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது. சிறந்த பால் உற்பத்தியாளா், சிறந்த குதிரை இனம் மற்றும் சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகம் போன்ற போட்டிகளும் இப்போதே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு கண்காட்சியில் விற்பனைக்காக இதுவரை 4,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,028 குதிரைகள் மற்றும் 1,306 ஒட்டகங்கள் அடங்கும்.
இதில் சண்டீகரைச் சோ்ந்த கேரி கில்லுக்குச் சொந்தமான, பல நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற ‘ஷாபாஸ்’ என்ற இரண்டரை வயது மாா்வாரி இன ஆண் குதிரை தனிச் சிறப்புடன் பாா்க்கப்படுகிறது. இந்தக் குதிரையின் விற்பனை விலை ரூ. 15 கோடி என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் மற்றொரு முக்கிய ஈா்ப்பாக 1,500 கிலோ எடையுள்ள ‘அன்மோல்’ என்ற எருமை உள்ளது. இதன் விலை ரூ.23 கோடி என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எருமை ‘அரச குடும்ப நபரைப் போல வளா்க்கப்படுகிறது’ என்றும், நாள்தோறும் பால், நாட்டு நெய் மற்றும் உலா் பழங்கள் கொடுக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளா் பாலிமிந்திரா கில் குறிப்பிட்டுள்ளாா்.
இதே வரிசையில், உஜ்ஜைனைச் சோ்ந்த 600 கிலோ எடையுள்ள ‘ராணா’ என்ற எருமைக்கு ரூ.25 லட்சம் விலை மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எருமைக்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.1,500 மதிப்பிலான உணவு வழங்கப்படுகிறது.
ஜெய்பூா் பாகுரூவைச் சோ்ந்த அபினவ் திவாரி, பல்வேறு இனங்களைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட பசுக்களைக் கொண்டு வந்துள்ளாா். இதில், 16 அங்குல உயரமே உள்ள ஒரு பசு, புஷ்கா் சந்தையிலேயே மிகச் சிறிய பசுக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
முன்னேற்பாடுகள்....:
கண்காட்சிக்கு வரும் கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ராஜஸ்தான் கால்நடை பராமரிப்புத் துறை தீவிர கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்ப் பரவலுக்கான அபாயம் அதிகரிக்கும் என்பதால் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்றும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கால்நடை மருத்துவக் குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், ‘கண்காட்சியின்போது 2,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பணியமா்த்தப்படுவாா்கள். பாா்வையாளா்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து அதிகாரிகளுக்கும் முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று அஜ்மீா் மாவட்ட கிராமப்புற காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திர சௌத்ரி தெரிவித்தாா்.

