தவறான கைது, சிறைவாசத்துக்கு இழப்பீடு கோரி மனு: மகாராஷ்டிர அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தவறான கைது மற்றும் சிறைவாசத்துக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு மகாராஷ்டிர மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
Supreme Court
உச்சநீதிமன்றம் ANI
Published on
Updated on
1 min read

தவறான கைது மற்றும் சிறைவாசத்துக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு மகாராஷ்டிர மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

தவறான கைது, சிறைவாசத்துக்கு இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஒரு விவகாரத்தில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனுதாரருக்கு, மூன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தாணே விசாரணை நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் உறுதி செய்தது. இந்நிலையில், இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை கடந்த மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், போலீஸ் விசாரணையில் குறைபாடுகள் மற்றும் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி குற்றச்சாட்டிலிருந்து மனுதாரரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில், மனுதாரர் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் கடந்த மே மாதம் விடுவிக்கப்பட்டார்.

தற்போது 41 வயதாகும் அந்த மனுதாரர், பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கைது மற்றும் சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தனக்கான அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட மாநிலம் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டார்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தன. அப்போது மனுக்களை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், "வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படும் நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் வெறும் விடுவிப்பு மட்டும் போதாது. மனுதாரருக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளுக்கு மாநிலம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் வரும் நவம்பர் 24-ஆம் தேதிக்குள் மகாராஷ்டிர மாநிலம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுமாறு அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலை நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது என்று குறிப்பிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com