

கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையடுத்து, பிஎம் ஸ்ரீ திட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு, மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு மாநில அரசுகள் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே, மத்திய அரசின் கல்வி நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் கேரள அரசு, மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆனால், கேரளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இதனை கடுமையாக எதிர்த்தது. தங்களுக்குத் தெரியாமலேயே கேரள அரசின் கல்வித் துறை இந்த ஒப்பந்தத்தைச் செய்தது, அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் முதல்வரும் கல்வித் துறை அமைச்சரும் கையெழுத்திட்டுள்ளனர், இது கூட்டணி முடிவுகளையும், கூட்டணியின் கூட்டு ஒழுங்கையும் மீறிய செயல் என்று விமர்சித்தது.
தொடர்ந்து. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடம் பேசி வந்தனர்.
பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறிய நிலையில், மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் உள்ள விதிமுறைகளில் சில தளர்வுகளை கொண்டுவர மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.