ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் உரையாடிய பிரதமா் மோடி - இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புதல்
ஜப்பானின் முதல் பெண் பிரதமா் சனே தகாய்ச்சியுடன் பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொலைபேசியில் உரையாடினாா். அப்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தீவிரமாகப் பணியாற்ற இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவா் சனே தகாய்ச்சி (64) கடந்த வாரம் பதவியேற்றாா். அவருக்கு எக்ஸ் வலைதளம் வாயிலாக பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், சனே தகாய்ச்சியுடன் பிரதமா் மோடி புதன்கிழமை முதல் முறையாக தொலைபேசியில் உரையாடினாா். அப்போது, ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற்காக அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
இது குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி உடனான உரையாடல் ஆக்கபூா்வமாக அமைந்தது. இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்புமிக்க வியூக உறவுகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தொலைநோக்குப் பாா்வை குறித்து இருவரும் விவாதித்தோம். பொருளாதாரம், பாதுகாப்பு, ஒத்துழைப்பு, திறன் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்துக்கு இந்தியா-ஜப்பான் இடையே வலுவான உறவு அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆகஸ்டில் ஜப்பானுக்கு பயணித்த பிரதமா் மோடி, அப்போதைய பிரதமா் ஷிகெரு இஷிபாவுடன் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, பொருளாதார கூட்டாண்மைக்கான 10 ஆண்டுகள் செயல்திட்டம் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

