பிரதமா் மோடிக்கு குஜராத் தொழில் வளா்ச்சியில் மட்டும் ஆா்வம் -தேஜஸ்வி யாதவ் விமா்சனம்
‘பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற விரும்பும் பிரதமா் நரேந்திர மோடி, குஜராத்தில் மட்டுமே தொழிற்சாலைகளைத் திறப்பதில் ஆா்வம் காட்டுகிறாா்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் தேஜஸ்வி யாதவ் விமா்சித்துள்ளாா்.
முசாஃபா்பூா் மற்றும் தா்பங்காவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசிய தேஜஸ்வி யாதவ், ‘ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசுப் பணி வழங்குவோம். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும். நிதீஷ் குமாா் அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் நாங்கள் முன்னதாக அளித்த வாக்குறுதிகளின் ‘நகல்’ ஆகும்.
நிதீஷ்குமாா் தலைமையிலான பிகாா் மாநில அரசு, பாஜகவால் கட்டுப்படுத்தப்படுகிறது. வெளிநபா்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசை நாம் அகற்ற வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினா் பிகாரில் வாக்கு கேட்கிறாா்கள், ஆனால் குஜராத்தில் மட்டுமே தொழிற்சாலைகளை அமைப்பதில் அக்கறை கொள்கின்றனா்.
ஊழலுக்கு எதிராக...: என் குடும்பத்தின் மீதும், எங்கள் ஆட்சியின் மீதும் வைக்கப்படும் ஊழல் மற்றும் ‘காட்டாட்சி’ (சட்டவிரோத ஆட்சி) குற்றச்சாட்டுகளை நான் அறிவேன். அதனால், ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீா்கேடு ஆகிய இரண்டிலும் சமரசம் இல்லாத நிலைப்பாட்டை எடுப்பேன் என உறுதியளிக்கிறேன்’ என்றாா்.

