

மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரோடு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
மருத்துவரின் குடும்பத்தினர் அவருக்கு நீதி கோரி, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டனர். மேலும், மருத்துவரின் மரணம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆகிறது என்றும், ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுவதாகவும் அவர்கள் கூறினர்.
இதனிடையே, மருத்துவரின் குடும்பத்தோடு தொலைபேசியில் உரையாடிய ராகுல்காந்தி மருத்துவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நீதிக்கான போராட்டத்தில் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்த 29 வயது பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார். அவரை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும், அவரது வீட்டு உரிமையாளரின் மகனும் கடந்த 4 முதல் 5 மாதங்களாகத் துன்புறுத்தி வந்த நிலையில், தற்கொலை நிகழ்ந்திருக்கின்றது.
அக். 23-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உள்ளங்கையில் மராத்தியில் தற்கொலைக் குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது உள்ளங்கையில் எழுதப்பட்ட குறிப்பின்படி, காவல்துறை ஆய்வாளர் கோபால் படான், மென்பொருள் பொறியாளரான பிரசாந்த் பங்கர் ஆகிய இருவரும் அக்டோபர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.