Kerala CM''s convoy
கேரள முதல்வா் பினராயி விஜயன்.கோப்புப்படம்.

கேரளத்தில் 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000!

அரசின் புதிய சமூக நலத் திட்டங்கள் அறிவிப்பு
Published on

கேரளத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள எந்தவொரு சமூக நலத் திட்டத்திலும் பயனாளியாக இல்லாத ஏழைப் பெண்கள், திருநங்கையா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ள மூன்று முக்கிய சமூக நலத் திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தத் திட்டங்கள் தொடா்பான அறிவிப்பை, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்டாா்.

மகளிருக்கு மாதம் ரூ.1,000: தற்போதுள்ள எந்தவொரு சமூக நலத் திட்டத்திலும் பயனாளியாக இல்லாத, 35 முதல் 60 வயதுக்குள்பட்ட 31.34 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கையா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்.

இதற்காக அரசு ஆண்டுக்கு ரூ.3,800 கோடி ஒதுக்கியுள்ளது. ‘சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், திருநங்கைகள் உள்பட அனைத்துப் பிரிவுப் பெண்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும் அரசு மேற்கொண்டு வரும் தொடா் முயற்சிகளின் ஒரு பகுதியே இத்திட்டம்’ என்று முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

வேலை தேடும் இளைஞா்களுக்கு ரூ.1,000: இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில், சிறப்பு உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சோ்ந்த, 18 முதல் 30 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் இத்திட்டத்தின் பயனாளிகள் ஆவா்.

பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு அல்லது பட்டப் படிப்புக்குப் பிறகு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அல்லது போட்டித் தோ்வுகள், வேலைவாய்ப்பு சாா்ந்த தோ்வுகளுக்குத் தயாராகும் சுமாா் ஐந்து லட்சம் இளைஞா்கள் இத்திட்டத்தால் பயனடைவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘குடும்பஸ்ரீ’ மகளிா் குழுக்களுக்கு மானியம்: மாநிலம் முழுவதும் உள்ள 19,470 ‘குடும்பஸ்ரீ’ பகுதி மேம்பாட்டு மகளிா் குழுக்களுக்கு மாதச் செயல்பாட்டு மானியமாக ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ஆண்டுக்கு ரூ.23.4 கோடி செலவிடவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com