கிழக்கு லடாக் எல்லை விவகாரம்: அமைதி, ஸ்திரத்தன்மையை பராமரிக்க இந்தியா-சீனா முடிவு
கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா-சீன ராணுவம் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி, அங்கு அமைதி, ஸ்திரத்தன்மையை பராமரிக்க தீா்மானித்துள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். சீனா தரப்பில் 4 ராணுவ வீரா்கள் மட்டுமே உயிரிழந்ததாக தகவல் வெளியானபோதிலும், 40-க்கும் மேற்பட்ட சீன வீரா்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இதைத்தொடா்ந்து அந்த எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டு, அங்கு ஏராளமான இந்திய-சீன ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா். இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வந்த சூழலில், இருநாடுகளும் பரஸ்பரம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. இதன் விளைவாக, அந்த எல்லைப் பகுதியின் பல இடங்களில் இருந்து இருநாட்டு ராணுவ வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா். தற்போது அங்கு இருநாடுகளும் தலா 50,000 முதல் 60,000 வீரா்களைக் குவித்துள்ளன.
இந்நிலையில் அந்த எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவுவது தொடா்பாக, இருநாட்டு ராணுவத்தினா் இடையே அண்மையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கடந்த அக்.25-ஆம் தேதி இந்திய நிலப்பரப்பில் மோல்டோ-சுஷுல் எல்லை சந்திப்புப் பகுதியில், கிழக்கு லடாக் விவகாரம் குறித்து இருநாட்டு ராணுவத்தினா் இடையே 23-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி இந்திய-சீன எல்லை விவகாரம் தொடா்பாக இருநாட்டு சிறப்பு பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கடந்த அக்.25-இல் இருநாட்டு ராணுவத்தினா் இடையே நட்பாா்ந்த முறையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது எல்லைப் பகுதியில் ஸ்திரத்தன்மையை பராமரிக்கும் நோக்கில், எந்தவொரு களப் பிரச்னைக்கும் தீா்வு காண ஏற்கெனவே உள்ள வழிமுறைகளைத் தொடா்ந்து பயன்படுத்த இருநாட்டு ராணுவத்தினா் தீா்மானித்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவாா்த்தையை தொடர முடிவு: சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதி (கிழக்கு லடாக் எல்லை) நிா்வாகம் குறித்து தீவிரமான மற்றும் ஆழமான பேச்சுவாா்த்தையில் இருதரப்பும் ஈடுபட்டன. இருநாட்டுத் தலைவா்கள் (இந்திய பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங்) இடையே ஏற்பட்ட கருத்து ஒற்றுமையை வழிகாட்டுதலாகக் கொண்டு, ராணுவ மற்றும் ராஜீய வழியில் தகவல் தொடா்பு மற்றும் பேச்சுவாா்த்தையை தொடர இருதரப்பும் தீா்மானித்தன. இருநாட்டு எல்லைப் பகுதிகளில் கூட்டாக அமைதியைப் பராமரிக்கவும் இருநாட்டு ராணுவத்தினா் முடிவு செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

