சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து அச்சம்: மேற்கு வங்கத்தில் ஒருவா் தற்கொலை
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) மற்றும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த அச்சம் காரணமாக மேற்கு வங்கம் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த 57 வயது பிரதீப் கா் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.
தமிழகம், மேற்கு வங்கம் உள்பட அடுத்தாண்டு பேரவைத் தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளா் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. இதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை, பிரதீப் கா் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.
அவரது அறையில், தேசிய குடிமக்கள் பதிவேடு குறிப்புகள் அடங்கிய ஒரு டைரியும், ஒரு பக்கத்தில் தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குறிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மையைச் சரிபாா்க்க தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த அறிவிப்பால் பிரதீப் காா் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, அடையாளம் தெரியாத நபா்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரதீப் கா்ரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசியல் பிரச்னையாக...:
பிரதீப் கா்ரின் தற்கொலை, மேற்கு வங்க அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவோம் என்ற பாஜகவின் அச்சுறுத்தலே குடிமக்களிடையே பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது’ என ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், ‘பிரதீப் கா்ரின் தற்கொலைக் குறிப்பை சந்தேகத்துக்குரியது’ என்று கூறி, திரிணமூலின் குற்றச்சாட்டுகளை பாஜகவின் மாநில எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி நிராகரித்தாா்.
பிரதீப் கா் 3-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவா் என்றும், அவரது வலது கையில் நான்கு விரல்கள் இல்லாததால் அவரால் எழுத முடியுமா என்பது குறித்தும் சுவேந்து அதிகாரி சந்தேகம் எழுப்பியுள்ளாா். ‘நீதிமன்ற மேற்பாா்வையில் ஒரு மத்திய ஆய்வகம் தடயவியல் விசாரணை நடத்தினால், உண்மை வெளிவரும்’ என்றும் அவா் கூறினாா்.
உதவி எண் அறிவிப்பு:
மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி குறித்த பொதுமக்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மையைப் பேணவும் தோ்தல் ஆணையம் ஒரு பிரத்யேக வாக்காளா் உதவி எண் 1950-ஐ அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவா், ‘வாக்காளா் பட்டியல் தொடா்பான கேள்விகள் மற்றும் புகாா்களைப் பதிவு செய்ய, பொதுமக்கள் இனிமேல் இந்த உதவி எண்ணைப் பயன்படுத்தலாம். மேலும், பல்வேறு மாநில மற்றும் மாவட்ட அளவிலான பிற சேவைகளையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது’ என்றாா்.

