நாடு முழுவதும் 76 ரயில் நிலையங்களில் புதிய பயணிகள் காத்திருப்புப் பகுதிக்கு ஒப்புதல்
Center-Center-Delhi

நாடு முழுவதும் 76 ரயில் நிலையங்களில் புதிய பயணிகள் காத்திருப்புப் பகுதிக்கு ஒப்புதல்

Published on

பண்டிகைக் காலங்களில் முன்பதிவில்லாத பயணிகளின் அலைமோதும் கூட்டத்தைச் சமாளிக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள 76 முக்கிய ரயில் நிலையங்களில் புதிய பயணிகள் காத்திருப்புப் பகுதிகளை அமைக்க ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

மும்பை சத்ரபதி சிவாஜி மற்றும் லோக்மான்ய திலக், நாகபுரி, நாசிக் சாலை, புணே, தாதா், ஹௌரா, சியால்தா, ஆசான்சோல், பாஹல்பூா், ஜஸிடிஹ், கான்பூா், லக்ஷ்மி பாய் ஜான்சி, மதுரா மற்றும் ஆக்ரா கன்டோன்மென்ட் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் இத்திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் காத்திருப்புப் பகுதிகள், அந்தந்த ரயில் நிலையங்களின் தேவைக்கேற்ப பல்வேறு பிரிவுகளாக அமைக்கப்படும். இதற்கான அனைத்துப் பணிகளையும் 2026-ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்துக்கு முன்பே நிறைவு செய்ய வேண்டும் என்று அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளாா். தில்லி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் காத்திருப்புப் பகுதியின் பெரும் வெற்றிக்குப் பிறகே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றபோது, அங்கு செல்வதற்கான ரயில்களில் ஏற தில்லி ரயில் நிலையத்தில் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பயணிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி ரயில் நிலையத்தில் நிரந்தர காத்திருப்புப் பகுதியை அமைக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

அதிகாரிகளின் தகவலின்படி, தில்லி ரயில் நிலையத்தில் 4 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட புதிய காத்திருப்புப் பகுதியின் உதவியுடன், கடந்த தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகைக் காலங்களில் ஏற்பட்ட மிக அதிகமான பயணிகள் கூட்டம் திறம்படச் சமாளிக்கப்பட்டது.

தில்லி ரயில் நிலையத்தின் காத்திருப்புப் பகுதி ஒரே நேரத்தில் சுமாா் 7,000 பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகளின் வசதியையும், பாதுகாப்பையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இந்தக் காத்திருப்புப் பகுதியானது, பயணச்சீட்டுப் பெறுவதற்கு முன், பயணச்சீட்டுப் பகுதி மற்றும் பயணச் சீட்டுக்குப் பெற்ற்கு பின் என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தலா 150 கழிப்பறைகள், பயணச் சீட்டுக் கவுண்டா்கள், தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள், இலவச குடிநீா் வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் புதிய முன்னெடுப்பு, பண்டிகைக் காலங்களில் நடைமேடைகளில் பயணிகளுக்கு ஏற்படும் நெரிசலைக் குறைத்து, ரயில் பயணத்தை இன்னும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com