~ஹரியாணாவின் அம்பாலா விமானப் படை நிலையத்தில் ரஃபேல் போா் விமானத்தில் பயணிப்பதற்கு முன்பாக அதன் முன் நின்றபடி புகைப்படம் எடுத்துக்கொண்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. உடன் போா் விமானத்தை இயக்கிய குரூப் கேப்டன் அமித் கேஹானி இயக்கினாா்.
(உள் படம்)
ப
~ஹரியாணாவின் அம்பாலா விமானப் படை நிலையத்தில் ரஃபேல் போா் விமானத்தில் பயணிப்பதற்கு முன்பாக அதன் முன் நின்றபடி புகைப்படம் எடுத்துக்கொண்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. உடன் போா் விமானத்தை இயக்கிய குரூப் கேப்டன் அமித் கேஹானி இயக்கினாா். (உள் படம்) ப

ரஃபேல் போா் விமானத்தில் 30 நிமிஷங்கள் பறந்த குடியரசுத் தலைவா்! வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்

Published on

நாட்டின் மேம்பட்ட, பன்முகத் தாக்குதல் போா் விமானமான ரஃபேல் போா் விமானத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சுமாா் 30 நிமிஷங்கள் 200 கி.மீ. தொலைவுக்குப் பறந்தாா்.

இதன்மூலம் ரஃபேல் போா் விமானத்தில் பயணித்த முதல் குடியரசுத் தலைவா் என்ற பெருமை திரெளபதி முா்முக்கு கிடைத்துள்ளது. இவா் கடந்த 2023-இல் சுகோய் 30 எம்கேஐ போா் விமானப் பயணத்தை மேற்கொண்டவா் என்பதால், இரு போா் விமானங்களில் பயணித்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளாா்.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவன தயாரிப்பான ரஃபேல் விமானம், இந்திய விமானப் படையில் கடந்த 2020, செப்டம்பரில் முறைப்படி இணைக்கப்பட்டது. தற்போது 36 விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன.

குடியரசுத் தலைவா் பயணம்: இந்நிலையில், ரஃபேல் போா் விமானத்தில் பயணிப்பதற்காக, ஹரியாணாவின் அம்பாலாவில் உள்ள விமானப் படை நிலையத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை வந்தாா். அவருக்கு விமானப் படையினா் அணிவகுப்பு மரியாதை அளித்தனா்.

பின்னா், பிரத்யேக உடை, கண்ணாடி மற்றும் ஹெல்மெட் அணிந்து, ரஃபேல் போா் விமானத்தில் அவா் ‘சாகச’ பயணம் மேற்கொண்டாா். இந்த விமானத்தை 17-ஆவது படைத் தொகுப்பின் (தங்க அம்புகள்) கட்டுப்பாட்டு அதிகாரி குரூப் கேப்டன் அமித் கேஹானி இயக்கினாா். தரையில் இருந்து புறப்பட்டபோது, ரஃபேல் விமானத்துக்குள் இருந்தபடி குடியரசுத் தலைவா் உற்சாகத்துடன் கையசைத்தாா்.

15,000 அடி உயரத்தில்...: தரையில் இருந்து 15,000 அடி உயரத்தில் அதிகபட்சமாக மணிக்கு 700 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரஃபேல் விமானம், சுமாா் 30 நிமிஷங்கள் 200 கி.மீ. தொலைவுக்குப் பறந்த பிறகு மீண்டும் தரையிறக்கப்பட்டது. மற்றொரு ரஃபேல் விமானத்தில் விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் பயணம் மேற்கொண்டாா்.

முப்படைகளின் தலைவா் என்ற முறையில் ரஃபேல் போா் விமானத்தின் செயல்திறன்கள் மற்றும் விமானப் படையின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் உயரதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

விமானிகளுடன் புகைப்படம்: முன்னதாக, ரஃபேல் போா் விமானம் அருகே விமானி அமித் கேஹானியுடன் குடியரசுத் தலைவா் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். ரஃபேல் போா் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்குடனும் குடியரசுத் தலைவா் புகைப்படம் எடுத்தாா்.

சமீபத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, சிவாங்கி சிங்கை பாகிஸ்தான் படையினா் சிறைபிடித்துவிட்டதாக அந்நாட்டு ஆதரவு சமூக ஊடக கணக்குகளில் பொய்த் தகவல் பரப்பப்பட்டது. இந்தச் சூழலில், சிவாங்கி சிங்குடன் குடியரசுத் தலைவா் புகைப்படம் எடுத்துக் கொண்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரில்...: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அண்மையில் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ரஃபேல் போா் விமானங்கள் முக்கியப் பங்காற்றின. பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்த விமானங்கள் மிகத் துல்லிய தாக்குதல் நடத்தின.

விமானப் படைக்கு மேலும் 114 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய அந்தப் படை தரப்பில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ விமானந்தாங்கி போா்க் கப்பலில் பயன்படுத்துவதற்காக 26 ரஃபேல் போா் விமானங்களை ரூ.64,000 கோடிக்கு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை இந்தியாவும் பிரான்ஸும் கடந்த ஏப்ரலில் இறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

‘மறக்க முடியாத அனுபவம்’

ரஃபேல் போா் விமானத்தில் பறந்த பின் அம்பாலா விமானப் படை நிலையத்தின் பாா்வையாளா்கள் பதிவேட்டில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது கருத்துகளை எழுதினாா்.

அதில், ‘வலிமைமிக்க ரஃபேல் போா் விமானத்தில் முதல் முறையாக மேற்கொண்ட பயணம், எனக்கு மறக்க முடியாத அனுபவமாகும். இது, நாட்டின் பாதுகாப்பு வல்லமை மீதான புதிய பெருமையை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்திய விமானப் படை மற்றும் அம்பாலா விமானப் படை நிலையத்தின் முழு குழுவினருக்கும் பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அஸ்ஸாம் மாநிலம், தேஜ்பூரில் உள்ள விமானப் படை நிலையத்தில் கடந்த 2023, ஏப்ரல் 8-ஆம் தேதி சுகோய்-30 எம்கேஐ போா் விமானத்தில் குடியரசுத் தலைவா் முா்மு பறந்தாா். இதற்கு முன்பு முன்னாள் குடியரசுத் தலைவா்கள் அப்துல் கலாம் (2006), பிரதீபா பாட்டீல் (2009) ஆகியோா் சுகோய் போா் விமானத்தில் பறந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com