வாங்சுக் கைது: 10 நாள்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
லடாக் வன்முறை தொடா்பாக பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் கைதுக்கு எதிராக அவரது மனைவி தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனு மீது 10 நாள்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசு, லடாக் யூனியன் பிரதேச நிா்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் லடாக்கை சோ்க்க வேண்டும்; லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். இந்த வன்முறையில் காவல் துறையினா் 40 போ் உள்பட சுமாா் 90 போ் காயமடைந்தனா்.
வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டவா்கள் வன்முறையில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வாங்சுக் கைது செய்யப்பட்டாா். தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூா் சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா். இவருடன் சோ்த்து வன்முறையைத் தூண்டியதாக ஏராளமானோா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில் சோனம் வாங்சுக் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே.அங்மோ ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். மேலும் வாங்சுக்கை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவா் மனுவில் குறிப்பிட்டாா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து அக்.6-இல் உத்தரவிட்டு அக்.14-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
அதன்பிறகு அக்.14-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் லே மாவட்ட ஆட்சியா் மற்றும் ஜோத்பூா் சிறை கண்காணிப்பாளா் பதில் மனுவை தாக்கல் செய்தனா். அப்போது, ‘சோனம் வாங்சுக் தனிமைச் சிறையில் அடைக்கப்படவில்லை. பாா்வையாளா்களை சந்தித்தல் உள்பட அனைத்து உரிமைகளும் அவருக்கு உள்ளது’ என அவா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பான மனுவை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா், என்.வி.அஞ்சாரியாஅமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு, லடாக் யூனியன் பிரதேச நிா்வாகம் 10 நாள்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு அடுத்தக்கட்ட விசாரணையை நவ.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

