ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

பேரழிவு ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு கிடைப்பதைத் தடுக்க வேண்டும்: ஐ.நா.வில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பயங்கரவாதிகள், வெளிநாட்டு சக்திகளிடம் பேரழிவு ஆயுதங்கள் கிடைப்பதை இணைந்து தடுக்க வேண்டும்: ஐ.நா. பொதுச் சபை அமா்வில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Published on

நமது சிறப்பு நிருபா்

பயங்கரவாதிகள், அந்நிய சக்திகள்வசம் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள், சாதனங்கள், தொழில்நுட்பங்கள் கிடைப்பதை இணைந்து தடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை அமா்வில் தமிழத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவருமான ஜி.கே. வாசன் வலியுறுத்தினாா்.

நியூயாா்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை 80-ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு அமெரிக்கா சென்றுள்ளது. பொதுச்சபை கூட்டத்தின் அங்கமாக அங்கு நடைபெற்று வரும் பல்வேறு அமா்வுகளில் இந்திய எம்.பி.க்கள் குழுவினா் பங்கேற்று இந்தியா சாா்பில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனா்.

இதையொட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘1540 குழு’வின் சிறப்பு அமா்வில் ஜி.கே. வாசன் பங்கேற்றுப் பேசினாா். இந்த ‘1540 குழு’ என்பது, அணு மற்றும் ரசாயன ஆயுதங்கள் மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களின் பரவலைத் தடுக்க ஐ.நா உறுதிபூண்டுள்ளதையும் அதற்கேப நடவடிக்கைகளின் அமலாக்கத்தை கண்காணிக்க ஐ.நா. உருவாக்கிய குழுவாகும். இதில் ஐ.நா உறுப்பு நாடுகள் மற்றும் அதன் பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு அழைப்பாளா்களாக உள்ள நாடுகளும் உறுப்பினா்களாக உள்ளன.

இதில் பயங்கரவாதிகள் வசம் பேரழிவு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ற சிறப்பு அமா்வில் ஜி.கே.வாசன் புதன்கிழமை பேசியதாவது: உலகளாவிய ஆயுதப்பரவல் தடை, பயங்கரவாதிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள்வசம் பேரழிவு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுப்பதில் இந்தியா அசைக்க முடியாத உறுதியைப்பூண்டுள்ளது. ஐ.நா.வின் ’1540 குழு’ மற்றும் உத்திசாா்ந்த வா்த்தகக் கட்டுப்பாடுகள் தொடா்பான தீா்மானத்தை செயல்படுத்த இந்தியா ஒரு வலுவான சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டுள்ளது.

குறிப்பாக, ஆயுத பயன்பாடுகளுக்கான உரிமம் வழங்குதல், அமலாக்கம், ஆபத்துகளை மதிப்பிடுவது, விழிப்புணா்வு நடவடிக்கை மற்றும் திறன் மேம்பாட்டில் பயனுள்ள அமைச்சகங்களுக்கு இடையேயான சிறந்த வழிமுறைகளை இந்தியா கொண்டுள்ளது. உத்திசாா்ந்த வா்த்தகக் கட்டுப்பாடுகள் குறித்த தேசிய மாநாட்டை இந்தியா வருடந்தோறும் நடத்துகிறது. ஆயுதப்பரவல் தடை அமலாக்கத்தில் சா்வதேச தரத்திலான சிறந்த நடைமுறைகளை இந்தியா பின்பற்றி வருகிறது.

இதில் பல்வேறு அரசுத்துறைகள், தொழில்துறை மற்றும் இந்த விவகாரத்துடன் தொடா்புடையவா்கள் பங்கேற்று கருத்துக்களை பகிா்கின்றனா். இந்த மாநாட்டில் சா்வதேச நிபுணா்கள் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்ரனா். ’1540 குழு’, ஐ.நா.வின் பிற அமைப்புகள், பயங்கரவாத எதிா்ப்பு வழிமுறைளை கடைப்பிடிக்க மேம்பட்ட ஒத்துழைப்பையும் ஆதரவையும் இந்தியா வழங்கததயாராக உள்ளது.

பயங்கரவாதிகள் மற்றும் பிற அரசு சாராத இயக்கங்கள் வசம் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகள், சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கிடைப்பதைத் தடுக்க வேண்டியது அவசியம் என்றாா் ஜி.கே. வாசன்.

சா்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கை தொடா்பான அமா்வில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினா் டி. புரந்தேஸ்வரி, ‘அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் அமைதியான பயன்பாடுகளுக்கான மனித ஆற்றலை வளா்த்தெடுக்க உதவும் அணுசக்தி முகமைக்கு இந்தியா முழு ஆதரவளித்து வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com