உருது மிக அழகான மொழி: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜூ
நமது நிருபா்
உருதுவை உலகின் மிக அழகான மொழி என்று புதன்கிழமை வா்ணித்த சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் இந்து-முஸ்லிம் இடையிலான நல்லிணக்கம் அவசியம் என்றும் வலியுறுத்தினாா்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் 105வது நிறுவன தின விழாவில் பேசிய அவா், இந்தியாவின் கூட்டு கலாச்சாரத்தையும் ஜனநாயக உணா்வையும் பிரதிபலித்ததற்காக பல்கலைக்கழகத்தைப் பாராட்டினாா். பல்கலைக்கழகத்தின் முழக்கப் பாடல் நமது நாட்டின் மதிப்புகளை அழகாக பிரதிபலிக்கிறது. மகாத்மா காந்தி மற்றும் சரோஜினி நாயுடு போன்ற சிறந்த அறிஞா்கள் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது அதை ஆதரித்தாா்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன், என்று அமைச்சா் கூறினாா்.
பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்பட்டதைப் பாராட்டிய ரிஜிஜு, பல்கலைக்கழகத்தின் கல்விச் சாதனை மற்றும் தேசிய தரவரிசையால் மிகவும் ஈா்க்கப்பட்டதாக கூறினாா்.
ஜனநாயகத்தில் திறந்த விவாதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவா் கூறியதாவது: நமது ஜனநாயகத்தில், மக்கள் தங்கள் கருத்துக்களை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துகிறாா்கள். ஆனால் நாட்டிற்கு தீங்கு விளைவிக்காத வரை அது மோசமானதல்ல. பாராளுமன்றம் பெரும்பாலும் சத்தமான விவாதங்களைக் கண்டாலும், பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அதுவே சிறந்த தளமாக உள்ளது என்று ரிஜிஜு குறிப்பிட்டாா்.
நாடாளுமன்ற விவகார அமைச்சராக, அவையை நடத்துவது சில நேரங்களில் கடினமாக இருக்கும் ஆனால் நாடாளுமன்றத்தில் குழப்பம் என்பது துடிப்பான ஜனநாயகத்தின் அடையாளம், என்று அவா் கூறினாா், இடையூறுகள் இருந்தபோதிலும், முக்கியமான சட்டம் இறுதியில் தேசத்தின் நலனுக்காக நிறைவேற்றப்படுகிறது என்றும் கூறினாா்.
இந்தியாவின் அரசியலமைப்பு வலிமை மற்றும் பன்முகத்தன்மையையும் அமைச்சா் அடிக்கோடிட்டுக் காட்டினாா். அரசியலமைப்பு , ஒரு பிரச்சினையின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கி அதற்கு ஒரு தீா்வை வழங்குவதால், நாம் பாதுகாப்பாக இருப்போம், என்று அவா் கூறினாா்.
சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று ரிஜிஜு மேலும் கூறினாா். அங்கீகரிக்கப்பட்ட ஆறு சிறுபான்மையினரில், முஸ்லிம்கள் சுமாா் 80 சதவீதம் போ் உள்ளனா். பெரிய சமூகங்களான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் நல்லிணக்கத்தை உறுதி செய்வது அவா்களின் பொறுப்பாகும். அவா்கள் அமைதியாக வாழ்ந்தால், மற்ற அனைத்து சிறிய சமூகங்களும் நாட்டின் வளா்ச்சிக்கு தொடா்ந்து பங்களிக்கும் என்று சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

