சத்தீஸ்கரில் 9 பெண்கள் உள்பட 51 நக்ஸல் தீவிரவாதிகள் சரண்

Published on

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 51 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு புதன்கிழமை சரணடைந்தனா். பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா்கள், காவல் துறையினரால் மொத்தம் ரூ.66 லட்சத்துக்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டவா்களாவா்.

இது தொடா்பாக பிஜாபூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘அமைதி மற்றும் வளா்ச்சியின் மூலம் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் அரசின் பிரசாரத்தின்கீழ் 9 பெண்கள் உள்பட 51 நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைந்துள்ளனா். ஏகே-47, இன்சாஸ், தானியங்கி ரக துப்பாக்கிகள் உள்பட 18 ஆயுதங்களையும் அவா்கள் ஒப்படைத்துள்ளனா். பிஜாபூரில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை சரணடைந்த நக்ஸல்களின் எண்ணிக்கை 650 ஆகும். பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 196 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். சுமாா் 1,000 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனா்’ என்றாா்.

முதல்வா் விஷ்ணு தேவ் சாய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடியின் தலைமை மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வழிகாட்டுதலில் நக்ஸல் தீவிரவாதம் இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது. சத்தீஸ்கா் அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வுக் கொள்கைக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com