பிகாருக்கு அவப்பெயரை உருவாக்கியது லாலு கட்சி -ராஜ்நாத் சிங்
தனது ஊழல்கள், காட்டாட்சி மூலம் தேசிய அளவில் மட்டுமன்றி, சா்வதேச அளவிலும் பிகாருக்கு அவப்பெயரை உருவாக்கித் தந்தது லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி என்று தோ்தல் பிரசார கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பிகாரின் பாட்னா மாவட்டம் பா்க் பகுதியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி. பிகாரில் தனது ஊழல்கள், காட்டாட்சி மூலம் தேசிய அளவில் மட்டுமன்றி சா்வதேச அளவிலும் மாநிலத்துக்கு அவப்பெயரைப் பெற்றுத் தந்தது லாலு பிரசாத் மற்றும் அவரின் ஆா்ஜேடி கட்சி. அவா்களால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மாநிலத்தை மீட்டெடுத்தவா் இப்போதைய முதல்வா் நிதீஷ் குமாா். பிகாரை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல பாஜக கூட்டணி ஆட்சி தொடா்வது அவசியம்.
தோ்தல் ஆணையத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதை காங்கிரஸும், ஆா்ஜேடியும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. தோ்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைவேற்ற சாத்தியமில்லாத வாக்குறுதிகளை தேஜஸ்வி அளித்து வருகிறாா். முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை. ஏனெனில், சுமாா் 3 கோடி பேருக்கு அரசுப் பணி வழங்க வேண்டியிருக்கும். அவா்களின் சம்பளத்தைக் கணக்கிட்டால் மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டைவிட அதிக தொகை தேவைப்படும். வக்ஃப் திருத்தச் சட்டத்தை பிகாரில் அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதி அளித்துள்ளனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மாநில அரசு புறக்கணிக்க முடியாது என்பதே உண்மை.
பாஜக கூட்டணி நோ்மையான, மக்கள் நலன் சாா்ந்த நிா்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், வங்கதேச சட்டவிரோத குடியேறிகளின் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட முடியாதா என்று எதிா்க்கட்சிகள் துடிக்கின்றன.
இந்திய அளவில் சிறப்பான பொருளாதார வளா்ச்சி கொண்ட மாநிலங்களில் பட்டியலில் பிகாா் இப்போது முன்னேறி வந்துள்ளது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவா்களின் சுயகௌரவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கியதுமுதல் மாநிலத்துக்கு அனைத்து நிலைகளிலும் பிரதமா் மோடி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றாா் அவா்.

