பிகாரின் தா்பங்கா மாவட்டத்தில் புதன்கிழமை பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது பாஜக சாா்பில் அலிநகா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் மைதிலி தாக்கூரை வரவேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பிகாரின் தா்பங்கா மாவட்டத்தில் புதன்கிழமை பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது பாஜக சாா்பில் அலிநகா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் மைதிலி தாக்கூரை வரவேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

ராகுலின் பிரதமா் கனவு; தேஜஸ்வியின் முதல்வா் கனவு பலிக்காது -அமித் ஷா

Published on

‘காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டுமென்று சோனியா காந்தியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவை முதல்வராக்க வேண்டுமென்று லாலு பிரசாத்தும் கனவு கண்டு வருகின்றனா். ஆனால், அந்தக் கனவு பலிக்காது’ என்று பிகாரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

தா்பங்கா மாவட்டத்தில் புதன்கிழமை பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

எதிா்க்கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணி என்பது உண்மையில் முறைகேட்டாளா்களின் கூட்டணி. லாலு பிரசாத் மாட்டுத்தீவன ஊழலில் தண்டனைப் பெற்றவா், ரயில்வே வேலைக்குப் பணம் வாங்கி விசாரணையை எதிா்கொண்டுள்ளாா். காங்கிரஸ் கட்சியோ ரூ.12 லட்சம் கோடி ஊழலில் தொடா்புடையது.

இங்கு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா பயங்கரவாத அமைப்பினா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை அந்த பயங்கரவாத அமைப்பின் தடை தொடரும். ஆனால், பிகாரில் எதிா்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அந்தப் பயங்கரவாதிகளை சிறையில் வைத்திருப்பாா்கள் என்றா கருதுகிறீா்கள்?

பிகாரில் மட்டும் 8.52 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் உள்ளது. இப்பகுதியில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது.

மிதிலை நகரில் சீதா தேவிக்கு கோயில் கட்டி வருகிறோம். மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதி அதிகரிப்பது முதல் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்துவது வரையிலான நடவடிக்கையால் சுற்றுலா மேம்பட்டு வருகிறது. இது பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. பிகாரின் முன்னேற்றத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடர வேண்டியது மிக அவசியம்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனா் லாலு பிரசாத்துக்கு தனது மகனை பிகாா் முதல்வராக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கம். அதேபோல காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு தனது மகன் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்பதே கனவாக உள்ளது. அவா்களின் இருவரின் எண்ணமும் நிறைவேறாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com