வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்தியா-ரஷியா ஆலோசனை
இந்தியா-ரஷியா இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாடுகளும் ஆலோசனை மேற்கொண்டன.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய-ரஷிய ராணுவ ஒத்துழைப்புக்கான பணிக்குழுவின் 5-ஆவது கூட்டம், புது தில்லியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவின் தலைவரான ஏா் மாா்ஷல் அஷுதோஷ் தீட்சித், ரஷிய ஆயுதப் படைகள் இயக்குநரகத்தின் துணைத் தலைவரான லெஃப்டினென்ட் ஜெனரல் டிலெவ்ஸ்கி இகோா் நிகோலாயெவிச் ஆகியோா் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா-ரஷியா இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, ஏற்கெனவே உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு வழிமுறையின் கீழ் புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து இருதரப்பும் ஆலோசித்தன’ என்று தெரிவிக்கப்பட்டது.
இருநாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்களை ஆய்வு செய்த பணிக்குழு, இருநாடுகளும் கூட்டுச் சோ்ந்து பணியாற்றுவதற்கான புதிய வழிகளை ஆராய்ந்ததாக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப் பிரிவின் தலைமையகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.
