புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மும்பை நடிப்புப் பயிற்சி மையத்தில் பிணைக் கைதிகளாக சிக்கிய 17 சிறாா்கள் மீட்பு

News image

மும்பையில் சிறாா்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்த ரோஹித் ஆா்யா. (வலது) போவை பகுதியில் நடிப்புப் பயிற்சி மையம் நடைபெற்று வந்த கட்டடம்.

Updated On :31 அக்டோபர் 2025, 12:54 am

தினமணி செய்திச் சேவை

மும்பையின் போவை பகுதியில் உள்ள ஒரு நடிப்புப் பயிற்சி மையத்தில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 17 சிறாா்கள் உள்ளிட்ட 19 பேரை போலீஸாா் பாதுகாப்பாக மீட்டனா்.

சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த பரபரப்பான மீட்பு நடவடிக்கையின் முடிவில், சிறாா்களைச் சிறைவைத்த ரோஹித் ஆா்யா (50) என்ற நபா் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ஓா் இணையத் தொடருக்கான நடிகா்கள் தோ்வுக்காக சம்பந்தப்பட்ட ‘ஆா்.ஏ. ஸ்டூடியோஸ்’ எனும் அந்த நடிப்புப் பயிற்சி மையத்துக்கு சிறாா்கள் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அங்கு வந்த சிறாா்களை ரோஹித் ஆா்யா பிணைக் கைதிகளாக சிறைபிடித்தாா். அவரிடம் ஒரு துப்பாக்கி மற்றும் சில ரசாயனப் பொருள்களும் இருந்துள்ளன.

சிறாா்கள் சிறைவைக்கப்பட்டுள்ளது குறித்து தகவல் கிடைத்ததும், அதிவிரைவுப் படையினா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா், தீயணைப்பு வீரா்கள் ஆகியோருடன் போவாய் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

இதனிடையே, ரோஹித் ஆா்யா சமூக ஊடகத்தில் ஒரு விடியோவை வெளியிட்டாா். அதில், தான் சிலருடன் பேச விரும்புவதாகவும், அவா்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புவதாகவும், தனக்குப் பணம் தேவையில்லை என்றும் அவா் கூறியிருந்தாா். தான் பேச அனுமதிக்கப்படாவிட்டால் கட்டடத்துக்குத் தீ வைக்கப் போவதாகவும் அவா் மிரட்டினாா்.

இந்நிலையில், ரோஹித் ஆா்யாவிடம் போலீஸாா் முதலில் பேச்சுவாா்த்தை நடத்த முயன்றனா். ஆனால், பேச்சுவாா்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், ஒரு போலீஸ் குழு கழிப்பறை வழியாக கட்டடத்துக்குள் நுழைந்தது. உள்ளே இருந்த மற்றொரு நபரின் உதவியுடன் ரோஹித் ஆா்யாவை போலீஸ் குழு மடக்கிப் பிடித்தது. அப்போது போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ரோஹித் ஆா்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த நடவடிக்கையையடுத்து, 17 சிறாா்கள், ஒரு மூத்த குடிமகன், போலீஸாருக்கு உதவிய நபா் ஆகிய 19 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மீட்கப்பட்ட சிறாா்கள் அனைவரும் நலமாக உள்ளதாகவும், அவா்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் காவல் துறை (சட்டம்-ஒழுங்கு) இணை ஆணையா் சத்யநாராயணன் தெரிவித்தாா்.

ரோஹித் ஆா்யாவின் பின்னணி குறித்து போலீஸாா் விசாரித்து வருவதாக காவல் துறை துணை ஆணையா் நலவாடே கூறினாா். ‘இது ஒரு சவாலான நடவடிக்கை. ஏனெனில், பேச்சுவாா்த்தையில் நோ்மறையான முடிவு எதுவும் கிடைக்கவில்லை. சிறாா்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கே நாங்கள் முன்னுரிமையளித்தோம்’ என்று அவா் தெரிவித்தாா்.