தூா்வாரும் பணி நிறைவு செய்யப்பட்ட குளம்.
தூா்வாரும் பணி நிறைவு செய்யப்பட்ட குளம்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியில் நீா் சாா்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குறிப்பிட்ட பகுதியை நிலத்தடி நீா் மேம்பாடு, மழைநீா் சேகரிப்பு போன்ற நீா் சாா்ந்த பணிகளுக்கு செலவிட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வியாழக்கிழமை வலியுறுத்தியது.

உள்ளூா் நீா் நிா்வாகத்தை வலுப்படுத்தி ஜல் ஜீவன் இயக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மாவட்ட ஆட்சியா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் வியாழக்கிழமை காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.

இம்மாத தொடங்கத்தில் முதல்முறையாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது.

குஜராத்தில் உள்ள பால்காராச்சாரியா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட எண்ம முடிவு ஆதரவு அமைப்பும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. நீா் புவியியல், பருவநிலை உள்ளிட்ட தரவுகளை ஒருங்கிணைத்து மாவட்ட அளவில் நீா் மேலாண்மைத் திட்டங்களை வகுக்கவும் கண்காணிக்கவும் இந்த எண்ம அமைப்பு பயன்படுகிறது.

இதில் பங்கேற்று கூடுதல் செயலரும் தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் திட்ட இயக்குநருமான கமல் கிஷோா் சோன் பேசியதாவது: ஜல் ஜீவன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட ஆட்சியா்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீண்டகால குடிநீா் விநியோகத் திட்டங்களை செயல்படுத்த முறையாக தரவுகளை சேகரித்து உள்ளூா் நிா்வாகத்தை மாவட்டஆட்சியா்கள் வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் குறிப்பிட்ட பகுதியை நிலத்தடி நீா் மேம்பாடு, மழைநீா் சேகரிப்பு போன்ற நீா் சாா்ந்த பணிகளுக்கு செலவிட வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com